உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஆண்டவன்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

0
195

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஆண்டவன்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

வில்லியம் பிரதர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வி.வில்லி திருக்கண்ணன் இயக்கத்தில், கே.பாக்யராஜ் மற்றும் டிஜிட்டல் மகேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆண்டவன்’.

டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கபிலேஷ் இசையமைக்க, சார்லஸ் தனா பின்னணி இசையமைத்திருக்கிறார். லட்சுமணன் படத்தொகுப்பு செய்ய, சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன், நடிகர் முத்துக்காளை, நடிகர் கஞ்சா கருப்பு, இயக்குநர் கேந்திர முனியசாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் வில்லி திருக்கண்ணன், “’ஆண்டவன்’ படத்தின் டிரைலர் இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு மகேஷின் நண்பர்களுக்கு நன்றி. அந்த காலத்தில் இருந்து இப்போது வரை, கிராமங்களை நகரங்களாக மாற்றியது நாம் தான். அப்படி ஒரு கதையை தான் சொல்லியிருக்கிறோம். இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு படமாக இருக்காது, ஒரு காவியமாக தான் இருக்கும். எனக்கும் அதுபோல தான் இருந்தது, உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்.இந்த படத்தின் கதை மகேஷின் யூடியுப் வீடியோவில் இருந்து தான் எடுத்தது. என் முதல் படத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் திட்டத்தை குறிப்பிட்டு பேசியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதுநகர் மாவட்ட முன்னாள் கலெக்டர் மேகனாத ரெட்டி ஐயா அவர்கள் செய்த நல்ல விசயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். அனைத்து உயிரினங்களிடமும் நன்றி இருக்கிறது, ஆனால் நம்பிக்கை மனிதர்களிடம் மட்டும் தான் இருக்கிறது. எனவே, என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. ஊடகத்தினர் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் ஆயிரக்கணக்கில் கதை இருக்கிறது. அது கதை அல்ல, அனைத்தும் என் வாழ்க்கை தான், அவற்றை ஒவ்வொன்றாக படமாக நிச்சயமாக எடுப்பேன், எனவே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து வாழ்த்த வேண்டும்., நன்றி.” என்றார்.

படத்தின் நாயகன் டிஜிட்டல் மகேஷ் பேசுகையில், “என் ஆண்டவன் படத்தை மக்களிடம் கொண்டு செர்த்துக் கொண்டிருக்கும் என் நண்பர்கள், மகேஷ் என்பவர் யார்? என்பதை உலகிற்கு சொன்ன என் கிராம மக்கள் மற்றும் என் கிராமத்தைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் என் நன்றி. விருதுநகர் மாவட்ட முன்னாள் கலெக்டர் மேகனாத ரெட்டி ஐயா தான் இந்த படத்தின் நாயகன், அவரை வைத்து தான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அவரது கதாபாத்திரத்தில் தான் பாக்யராஜ் சார் நடித்திருக்கிறார். நான் இந்த படத்தில் நடித்தது போன்ற பீலிங்கே இல்லை. நான் யூடியுப் சேனலுக்காக வீடியோ எடுப்பது போல் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த சமூகத்திற்கு எதாவது நல்லது செய்ய மாட்டோமோ, இந்த வீடியோவால் மக்களுக்கு எதாவது நல்லது நடக்காதா, என்று யோசிக்கும் அனைவரும் இந்த படத்தின் ஹீரோக்கள் தான். இதே பிரசாத் லேபில் ஒரு நல்ல படத்தை எடுத்த இயக்குநரை வீடியோ எடுத்தேன், இன்று இதே பிரசாத் லேபில் ஹீரோவாக நிற்கிறேன். பத்திரிகையாளர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவர்களின் கதாபாத்திரம் தான் இந்த படம். பணம் வாங்கிக் கொண்டு கடைகளை விளம்பரம் செய்கிறோம். உணவு பற்றி விமர்சனம் செய்கிறோம். அவர்களை தவிர்த்து, கேமராவை தூக்கிட்டு யாருக்காவது, எதாவது நல்லது செய்ய மாட்டோமோ என்று யோசிப்பவர்கள் அனைவரும் இந்த படத்தின் ஹீரோ தான்.

கிராமங்களில் இருப்பவர்கள் நன்றாக படிக்கிறார்கள், வேலைக்காக சென்னைக்கு போகிறார்கள், பிறகு அங்கேயே வசதியாகி செட்டிலாகி விடுகிறார்கள். நானும் அப்படி தான் இருந்தேன். கொரோனா காலக்கட்டத்தில் ஊருக்கு போனேன். ஊரில் இருக்கும் போது ஒரு யுடியூப் சேனல் தொடங்கி வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் கிராமத்தின் அருகே ஒரு கிராமம் இருந்தது. அந்த ஊரில் மனிதர்களே இல்லை, ஒரு வயதான தம்பதி மட்டும் தான் இருந்தார்கள். இப்படி ஒரு ஊரா! என்று ஆச்சரியமாக இருந்தது. அப்போது அந்த ஊரை வீடியோ எடுத்ததோடு, அந்த தாத்தா – பாட்டிக்கு ஒரு வீடு வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டேன். அப்போது அந்த வீடியோவை பார்த்த கலெக்டர் மேகனாத ரெட்டி, நேரடியாக அந்த ஊருக்கு சென்று அந்த வயதானவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதாக அறிவித்து, வீடும் கட்டி கொடுத்தார். மேலும், அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் மீண்டும் திரும்ப வந்தால், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அந்த கதை தான் இந்த படம். இது ஒரு படமாக மட்டும் இன்றி மக்கள் மனதை உலுக்கி எடுக்கும் ஒரு சிறந்த படைப்பாக இருக்கும். இந்த படத்திற்கு ஊடகத்தினர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நானும் உங்களில் ஒருவன் என்ற உரிமையில் இதை கேட்கிறேன். எனக்கு அதிகமான பணம் செலவு செய்து, பெரிய அளவில் விளம்பரம் செய்யும் சக்தி இல்லை. எனவே எனக்கு என்னுடைய ஊடக சகோதரர்கள் கைகொடுத்து, இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் பேசுகையில், “இன்று எப்படி எப்படியோ சினிமா எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில், இப்படிப்பட்ட படம் தான் எடுக்க வேண்டும், என்ற ஒரு முடிவில் இருப்பவர் இயக்குநர் திருக்கண்ணன். அவர் பேசும்போது கூட, நான் இப்படிப்பட்ட படங்களை தான் எடுப்பேன், என்று சொன்னார். இவரைப் போல் சிலர் மட்டும் தான் இருப்பார்கள். இப்படி ஒரு விசயத்தை சொல்லும் போது, இதை திரைப்படமாக எடுத்து, இதன் மூலம் இதுபோன்ற கிராமங்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில் தான் திருக்கண்ணன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அவரது நோக்கத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

பலர் இன்று திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தான் செய்யும் செயலால், தனக்கு என்ன கிடைக்கும், பணம் வருமா, என்றெல்லாம் யோசிக்காமல் ஒரு கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று முயற்சித்த மகேஷ் உண்மையாகவே ஹீரோ தான். படப்பிடிப்புக்காக நான் அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது, இப்படி ஒரு ஊரா என்று ஆச்சரியப்பட்டேன். அங்கே இடிந்து போன வீடுகள் மட்டும் தான் இருக்கிறது, மனிதர்கள் யாருமே இல்லை. ஒரே ஒரு வயதான தம்பதி மட்டும் அங்கே வசிக்கிறார்கள். அந்த ஊரின் நிலையை வீடியோ எடுத்து போட்டு, அதன் மூலம் கலெக்டர் அந்த வயதானவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு விசயம் நடந்ததற்கு மகேஷ் தான் காரணம், அவருக்கு என் வாழ்த்துகள்.

இங்கு பேசுபவர்கள், சொந்த கிராமத்தை விட்டு விட்டு பலர் நகரத்திற்கு செல்வதாக சொன்னார்கள். வாழ்வதற்கு வழியில்லாமல் தான் பலர் கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயம், விவசாயம் செய்ய வழி இருந்தும், அந்த இடங்களை ரியல் எஸ்டேட்டுக்காக விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் விவசாயம் செய்வதற்கான நல்ல திட்டங்களை அரசு வகுத்து கொடுக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளும் தொடர்ந்த் விவசாயம் செய்வார்கள். இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறிக்கொண்டு, ஆண்டவன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.