Chennai City News

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்…!

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்…!

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது ‘எல் ஐ சி’ ( LIC – LOVE INSURANCE CORPORATION)

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார். உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார்.

இந்நிலையில் படத்தின் தலைப்பு தான் தற்போது சிக்கலாக மாறி உள்ளது. பிரபல மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ( LIC), தங்களுடைய பெயரை அவமதிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி என பெயரிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

இதனால் படத்தின் டைட்டிலை மாற்றிக் கொள்ளும்படி விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஏழு நாட்களுக்குள் தலைப்பை மாற்றவில்லை எனில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எல்ஐசி நிறுவனம் எச்சரித்துள்ளது. படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுதான் இந்த டைட்டிலை விக்னேஷ் சிவன் செலக்ட் செய்து இருந்தார். தற்போது எழுந்துள்ள இந்த சிக்கலால் படத்திற்கு பொருத்தமான வேறு டைட்டிலை தேடுவார்களா அல்லது அடுத்த கட்ட நகர்வாக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்த எல்ஐசி பட டைட்டில் என்னுடையது என இயக்குனர் எஸ் எஸ் குமரன், விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version