இயக்குநர் ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘நாக் நாக்’!
பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.
ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார்.
இயக்குநர் ராகவ் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தனது திரைப்பயணம் மற்றும் இந்தப் படம் பற்றி கூறியதாவது. “இது எனக்கு ஒரு முக்கியமான தருணம்… மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி. இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று ராகவ் ரங்கநாதன் கூறினார். “இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல். இப்போது… நாக் நாக் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது.”
அவர் தொடர்ந்து பேசுகையில், “அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. கே.பாலச்சந்தர் போன்ற ஆரம்பகால இயக்குநர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது, துணைக் கதாபாத்திரங்களின் ஆழம்தான். ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன்.”
தனது இயக்கம் மற்றும் கதை சொல்லும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி ராகவ் விளக்கினார்: “இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? நடன ரியாலிட்டி ஷோக்களில் என் மனைவியையும் என்னையும் சிலர் பார்த்திருக்கலாம். நாங்கள் சில போட்டிகளில் வென்றதும் உண்டு. அப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகளில் நான் மிகவும் பொக்கிஷமாக கருதியது, ‘நீங்கள் வெறும் நடனமாடவில்லை – ஒரு கதையைச் சொல்கிறீர்கள்’ என்பதுதான். அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் – கருத்துக்கள் – என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எங்கள் பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்று கலா மாஸ்டர் சொல்வார்கள். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான்.”
‘நாக் நாக்’ அதனுடைய ஒரு நீட்சிதான் என்று கூறிய அவர், “நான் இதற்கு முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும்… உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
தனது முதல் பட இயக்குநராக உணரும் பொறுப்பு குறித்துப் பேசிய ராகவ் ரங்கநாதன், தனது உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்: “எனக்கு ‘எந்திரன்’ படத்தில் சில காட்சிகளில் நடித்த வாய்ப்பு கிடைத்தது, அதைப் பற்றி இன்றும் பலர் பேசுகிறார்கள். அல்லது ‘நஞ்சுபுரம்’ போன்ற ஒரு படம், அது வெளிவந்த போது பலரை சென்றடையவில்லை என்றாலும், இன்று அதன் இசை, கதை, ஆத்மாவுக்காக பாராட்டப்படுகிறது. இருந்தாலும், இந்தப் படம் எனக்கு வேறுபட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்த முறை எல்லாமே என் மீதுதான். முழுப் பொறுப்பும் சுமையும் என் மீதுதான்.”
தனது நம்பிக்கையுடன் அவர் நிறைவு செய்தார்: “தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிக் கதவுகளை நான் நீண்டகாலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ‘நாக் நாக்’ மூலம்… அந்தக் கதவு இறுதியாகத் திறக்கும் என நம்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
முக்கிய கதாபாத்திரங்களில்:
இப்படத்தில் திறமையான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்:
கார்த்திக் குமார்
சனம் ஷெட்டி
லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி
பப்லு பிரித்விராஜ்
வட்சன் சக்கரவர்த்தி
ஐஸ்வர்யா
கலை
இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜியும், இசையமைப்பை நவீன் சுந்தரும் கவனித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதிபலிக்கும் வகையில், படத்தின் மர்மம் மற்றும் ஃபேன்டஸிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இசை அமைந்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.