மெட்ராஸ் மேட்னி சினிமா விமர்சனம்

0
493

மெட்ராஸ் மேட்னி சினிமா விமர்சனம் : மெட்ராஸ் மேட்னி எளிய மக்களின் வாழ்வியல் பிரதிபலிப்பு | ரேட்டிங்: 3/5

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாம்சன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ தயாரித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன​ம் வழங்கும் மெட்ராஸ் மேட்னி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி.

இதில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு -ஆனந்த் ஜி. கே, இசை – கே. சி. பாலசாரங்கன் , படத்தொகுப்பு – சதீஷ்குமார் சமுஸ்கி,  கலை – ஜாக்கி, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் அறிவியல் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர் ஜோதி ராமையா (சத்யராஜ்) சாமான்ய மக்களின் உணர்வுகளை கதையாக எழுதுவதற்காக நடுத்தர குடும்பத் தலைவன் கண்ணன் (காளி வெங்கட்) பற்றி இடைவிடாத கதை மூலம் விவரிப்பதோடு படம் தொடங்குகிறது. ஆட்டோ டிரைவரான காளி வெங்கட், காதல் மனைவி கமலம் (ஷெல்லி), மகள் தீபிகா (ரோஷிணி ஹரிபிரியா), மகன் தினேஷ் (விஷ்வா) உடன் வாழ்ந்து வருகிறார். முதலில் கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் வேலையை செய்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார். பிறகு தனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஆட்டோ ஒட்டி சராசரி வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். படிப்பை முடித்த தீபிகா குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் நம்பிக்கையில் பெங்களூரில் தங்கி வேலை செய்தாலும் அமெரிக்கா சென்று வேலை செய்து கடனை அடைத்து பெற்றோரை வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.  மகன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருக்கிறார். மகள் காதலிக்கும் இளைஞனை நிராகரிக்கும் கண்ணன், பெண்ணிற்கு வரன் பார்த்து திருமணத்தை முடிக்க முயல்கிறார். திருமண செலவிற்காக சேட்டிடம் கடன் பெற்று கார் வாங்குவதற்கு ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்கிறார். இதற்கிடையில், மெட்ராஸ் மேட்டினியில் செல்வாக்கு பெற முயற்சிக்கும் அரசியல்வாதிகள் வலம் வருகிறார்கள். இந்நிலையில், எதிர்பாராத விதமாக கண்ணன் வீட்டில் வளர்க்கும் நாய் மின்சாரம் தாக்கி இறந்து விடுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் மகன் தினேஷ் மின்சார அலுவலகத்திற்கு சென்று சண்டை போடுகிறார். மகனை தேடி வரும் பெற்றோர்கள் அவமானம் படுத்தப்பட, அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

எழுத்தாளர் ஜோதி ராமையா கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவ்வப்போது வந்து கதை சொல்லி படம் பார்ப்பவர்களுக்கு சற்று இடைஞ்சலாக இருக்கிறார் தவிர அவரது கதாபாத்திரம் திரைக்கதை நகர்வுக்கு எந்த விதத்திலும் உதவ வில்லை.

கதையின் நாயகனாக கண்ணன் எனும் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் காளி வெங்கட் உடல் மொழி, நுணுக்கமான முகபாவங்கள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவனின் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கீழ் நடுத்தர வர்க்கப் போராட்டங்கள் கடமையுடன் கடந்து செல்பவராக சிறந்த குணச்சித்திர நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பொறுப்பான குடும்பத்தலைவியாக ஷெல்லி, அமைதியாக வலிமையான மகள் தீபிகாவாக ரோஷ்னி, இருவரும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மகன் தினேஷ் கதாபாத்திரத்தில் துருதுருப்பு, கோபம், நாய் மீது வைத்திருக்கும் பாசம், அப்பாவை புரிந்து கொள்ளும் தருணத்தில் வெளிப்படுத்த முயலும் பாசம் என அனைத்து இடத்திலும் விஷ்வா எதார்த்தமான நடிப்பு வழங்கி உள்ளார்.

சுனில் சுகதா, கீதா கைலாசம், விஜய் டிவி ராமர், லோக்கல் ரவுடி, சாம்ஸ், அர்ச்சனா, மதுமிதா, ஜார்ஜ் மரியன், உட்பட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நம் நினைவில் உறுதியாக நிலைநிறுத்தும் நம்பிக்கையுடன் தங்கள் பாத்திரங்கள் வகிக்கிறார்கள்.

ஆனந்த் ஜி கே வின் ஒளிப்பதிவும், கே. சி. பால சாரங்கனின் இசை மற்றும் பின்னணி இசையும், படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் சமுஷ்கியின் எடிட்டிங் ஆகியோர் தொழில்நுட்ப ரீதியாக திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

இயக்குனர் கார்த்திகேயன் மணி, சாதாரண மக்களின் நிஜ வாழ்க்கை போராட்டங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து, திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாமல், இறுதிக் காட்சியில் உணர்ச்சிகரமான தருணங்களை மையக் கருவாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். மேலும் இயக்குனர் கார்த்திகேயன் மணி, சத்யராஜ் வைத்து வாய்ஸ் ஓவர் மூலம் கதை சொல்லும் முறையில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி படம் பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது.

மொத்தத்தில் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி, தேவ் ஆனந்த், ஆர்ச் தாம்சன், ராபர்ட் மார்டிசென்கோ, கோரின் மார்டிசென்கோ இணைந்து தயாரித்துள்ள மெட்ராஸ் மேட்னி எளிய மக்களின் வாழ்வியல் பிரதிபலிப்பு.