ரூ.58.70 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகள்… மக்களுக்கு அர்ப்பணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (7.12.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் 15 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா மற்றும் சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம், என மொத்தம் 58 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில்
3 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மூன்று முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன் விவரங்கள்:
=> முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 42.70 கோடி ரூபாய் செலவில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்துமிடத்தில் உணவகங்கள், தங்குமிடங்கள், ஒப்பனை அறைகள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்துகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
=> கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் 15 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு காலநிலைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
=> சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம்
சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மருத்துவர்கள் ஆலோசனை அறை, செவிலியர்களுக்கு தனி அறை, 3 மருத்துவ படுக்கை வசதிகளை உள்ளடக்கிய அவசர சிகிச்சைப் பிரிவு, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருந்தகம், 50 நபர்கள் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் காத்திருப்புக் கூடம், ஒப்பனை அறைகள், மருத்துவ அவசர ஊர்திகள் நிறுத்துமிடம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திற்கு தினந்தோறும் வருகை தரும் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.
இம்மருத்துவ சிகிச்சை மையத்தை தகுந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்டு திறம்பட செயல்படுத்திட அப்போலோ மருத்துவ குழுமம் முன்வந்துள்ளது.
– சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மொத்தம் 58 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரித்தா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ. சிவஞானம், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. அப்சல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.