2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்று இரண்டாவது ஆண்டில் காலடி வைக்கும் நிலையில், தவெக தலைமை அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார் விஜய்.
தமிழக அரசியல் களத்தில் புது வரவாக குதித்து இன்றோடு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி சரியாக மதியம் 1 மணியளவில் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்குவதாக விஜய் அறிவித்தார்.
கழகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல் மாநாடு, கட்சிக் கொடி, கொள்கை, அரசியல் தலைவர்கள், ’ஆட்சியில் அதிகாரத்தில் சமபங்கு’ என ஒரு அதிரடியான என்ட்ரி கொடுத்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து கட்சியின் நிர்வாகிகளையும், மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்றோடு ஓராண்டு நிறைவுற்று இரண்டாவது ஆண்டில் காலடி வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கொள்கை தலைவர்கள் சிலைகளை திறந்துவைத்த விஜய்..
தவெக தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தவெக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய் “1967இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே. இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்.
இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், கட்சிக்கொடியை ஏற்றிவைத்து, கொள்கைத் தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் சிலைகளை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையொட்டி 5ம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பதிவிகள் அறிவிக்கப்பட உள்ளது.