ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை: வேதாந்தா நிறுவன மனு தள்ளுபடி

0
260

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை: வேதாந்தா நிறுவன மனு தள்ளுபடி

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘வேதாந்தா குரூப்’ நிறுவனம் சார்பில், துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை துவங்கப்பட்டு இயங்கி வந்தது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், பொது மக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் மாசுபடுகிறது; நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என, ஆலைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆலையை மூடக்கோரிய போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாயினர். இதையடுத்து, ஆலையை மூடி, ‘சீல்’ வைக்க, 2018 மே, 28ம் தேதி, தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. ஆலையை திறக்கக் கூடாது என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. பல நாட்களாக இவ்வழக்கு விசாரணை நடந்தது. இரு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர். வழக்கின் தீர்ப்பை, 2020 ஜன., 8ல், தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இவ்வழக்கில், இன்று , 815 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு செல்லும் எனக்கூறி, வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சுமார் 1,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.