வீட்டிலிருந்து படிப்பதால் மனஅழுத்தம்: மாணவர்களை பெற்றோர் கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தல்

0
105

வீட்டிலிருந்து படிப்பதால் மனஅழுத்தம்: மாணவர்களை பெற்றோர் கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தல்

வீட்டிலிருந்து பாடம் படிக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை, பெற்றோர் கவனிக்க வேண்டுமென, உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க, ‘டிவி’ மூலம் பாடம் படிக்கவும், ஆசிரியர்கள், இணைய வழி வகுப்புகளும் நடத்தி வருகின்றனர். மாணவர்கள், நீண்ட நேரம் மொபைல் போன் பார்ப்பதால், கண் பாதிப்பு, தலைவலி போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் மட்டுமின்றி, மனதளவிலும், பாதிப்புகள் ஏற்படும் என, டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர். சில வீடுகளில், மாணவர்கள் இவ்வாறு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் விடுவது, அவர்களின் பாதிப்பை அதிகரிக்கும் என உளவியல் ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.

உளவியல் ஆலோசகர் ஒருவர் கூறியதாவது: மாணவர்கள், மொபைல்போன் மூலம் வகுப்புகள் கவனிக்கும் போது, பெற்றோர் உடன் இருப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம், அவர்கள் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க, பெற்றோரும் முயற்சி செய்ய வேண்டும். பாடத்தின் அடிப்படைகளை அவ்வப்போது நினைவுபடுத்தினாலே போதுமானது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி, அவர்களின் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முயற்சி கட்டாயம், அவர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், சாதாரணமான சூழ்நிலையில், மாணவர்கள் வழக்கத்துக்கு மாறாக துாக்கமின்மையால் பாதிக்கப்படுவது, பசியில்லாமல் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, பெற்றோரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்வது, குளிப்பதற்கு சோம்பேறித்தனம் கொள்வதும் கூட, அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் ஒரு அறிகுறிதான். பெற்றோர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் மனம் விட்டு பெற்றோரிடம் பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.