ரைட்டர் விமர்சனம்: இளைய தலைமுறை அனைவரும் அவசியம் பார்த்து எதிர்காலத்தில் சமூகங்களையும், தனிநபர்களையும் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை சொல்லும் படம் ரைட்டர் 

0
102

ரைட்டர் விமர்சனம்: இளைய தலைமுறை அனைவரும் அவசியம் பார்த்து எதிர்காலத்தில் சமூகங்களையும், தனிநபர்களையும் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை சொல்லும் படம் ரைட்டர் 

நீலம் ப்ரொடக்ஷன்ஸ், கோல்டன்ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், ஜெட்டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், அபையானந் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரிப்பில் சமுத்திரகனி, இனியா, லிஸ்ஸி ஆன்டனி, மகேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், சுப்ரமணிய சிவா, ஜி.எம்.சுந்தர், கவிதா பாரதி, மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, லாயர் லேமுவேல், லக்கி குமார், திலீபன், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்து ஃபிராங்ளின் ஜேக்கப் எழுதி இயக்கியுள்ள படம் ரைட்டர்.கோவிந்த் வசந்தா இசையமைக்க பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவில் படத்தொகுப்பை மணிகண்டன்; சிவகுமார் செய்துள்ளார். பிஆர்ஒ-குணா, ரியாஸ்.

போலீஸ் நிலையத்தில் சாதாரண ரைட்டராக வேலையை தொடங்கி ஒய்வு பெறும் வயதில் இருக்கும் சமுத்திரகனி  காவல் துறையினருக்கு யூனியன் வேண்டும் என்று வைராக்கியத்துடன் போராடும் அடக்கமான தைரியசாலி. இவரின் தைரியத்தை தூக்கி போட்டு மிதித்து அதற்கு தண்டனையாக சென்னை திருவல்லிக்கேணிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கே பாரா டூட்டியில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மாணவர் ஹரிகிருஷ்ணனை பத்திரமாக கண்காணிக்க அனுப்பப்படுகிறார். அதன் பின் போலீஸ் நிலையத்தில் உயர் அதிகாரியின் வற்புறுத்தலின் பேரில் க்ரைம் சீனை எழுதி கொடுக்கிறார். அதை வைத்தே ஹரிகிருஷ்ணனை மாட்டி விடுகின்றனர் போலீசார். இதை கண்எதிரே பார்க்கும் சமுத்திரகனி தன்னால் தானே இந்த நிலை ஹரிக்கு ஏற்பட்டது என்று எண்ணி  அவருக்கு உதவ பல வழிகளில் முயல்கிறார். ஆனால் ஹரியை கைது செய்ய காரணம் என்ன என்பதில் மட்டும் சமுத்திரகனியால்; கண்டுபிடிக்க முடியவில்லை. தெளிவான காரணத்தை கண்டுபிடித்தாரா? போலீசாரிடமிருந்து ஹரியை மீட்டாரா? இதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சமுத்திரகனி அதிலிருந்து மீண்டு வந்தாரா? இறுதியில் டிசி, சமுத்திரகனி, இவர்களில் யார் போட்ட திட்டம் வெற்றி பெற்றது என்பதே மீதிக்கதை.

58 வயது சீனியர் ரைட்டர் தங்கராஜாக சமுத்திரக்கனி  தொந்தியும் தொப்பையுமாக ரைட்டர் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை மையமாக கொண்டுபடம் முழுவதும் கலக்கியிருக்கிறார். இரண்டு மனைவிகளுடன் போராடும் சமுத்திரகனி வழக்கம்போலவே தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பல காட்சியில் குற்ற உணர்ச்சியோடு மனம் வெதும்பி கைகள் நடுங்க பேசும் அவரே கமிஷனரை சுட்டுத்தள்ளும் காட்சியில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். படத்துக்கு படம் அவரது நடிப்புத்திறன் உயர்ந்துக்கொண்டே போகிறது. ஹேட்ஸ் ஆப் சமுத்திரகனி.

அப்பாவி இளைஞராக நடித்துள்ள ஹரிகிருஷ்ணா விசாரணையிலிருந்து விடுவிக்குமாறு காவல்துறையினரிடம் கெஞ்சுவதாகட்டும், தனது அண்ணனிடம் முரண்டு பிடிப்பதாகட்டும் என்று அவரின் உழைப்பு மிகச்சிறப்பு.

சுப்பிரமணியம் சிவா நல்ல பாசக்கார வெள்ளேந்தி மனசுடைய அண்ணனின் கதாபாத்திரத்தில் பரிதவிப்பும், இயலாமையில் அழுகையும், கண்களை குளமாக்கிவிடுகிறார். அருமையான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். வாழ்த்துக்கள் சிவா.

படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் நடிகை இனியா  குதிரை ஓட்டுவது, குதிரையை அடக்க முயற்சி செய்வது என அருமையாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

வட இந்தியர்கள் பேசும் தமிழில் கமிஷனராக நடித்திருக்கும் கவின் ஜெய்பாபு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் வெறுக்கதக்க வில்லனாக பதிவதோடு அதிகார திமிரோடு நடந்து கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டல் ரகம். அடுத்த வில்லனாக தெரிவது இன்ஸ்பெக்டராக வரும் கவிதாபாரதி தான்.

திருட்டு வழக்கில் மாட்டி பின் காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகள் செய்யும் ஆண்டனி வெகு யதார்த்தமாக நடித்து நடுநடுவே போகிற போக்கில் பல இடங்களில் ஒன் லைன் வசனத்தில் சிரிக்க வைத்து சாதாரணமாக ஸ்கோர் செய்து விட்டுப் போகிறார்.

ஒரு காட்சியில் மட்டும் வரும் போஸ் வெங்கட் தொடங்கி லிஸ்ஸி ஆன்டனி, மகேஸ்வரி, ஜி.எம்.சுந்தர், காவலராக வரும் திலீபன், லாயர் லேமுவேல், லக்கி குமார் என மொத்த படக்குழுவும் தங்களுடைய பங்களிப்பை முழுவதுமாக சிறப்பாக வழங்கியுள்ளனர்.

படத்தில் பிரதீப் காளிராஜா கேமரா ஒர்க், கோவிந்த் வசந்தா இசை, மணிகண்டன்; சிவகுமார் எடிட்டிங் அனைத்தும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. கோவிந்தாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சட்டத்திற்கேற்றாற்போல் திட்டமிட்டு ஒருவனை குற்றவாளியாக்க ரைட்டர் தங்கராஜ் புனையும் ஓர் குற்றச்சம்பவத்தை வைத்தே தேவகுமார் என்கிற ஆய்வு மாணவன் கைது செய்யப்படுகிறான் என்பது தெரிந்ததும் அவரைத் துரத்தும் குற்ற உணர்ச்சியிலிருந்து மீள என்ன முயற்சிகள் செய்தார் என்பது தான் திரைக்கதை.  காவல்துறை அதிகாரிகளின் உணர்வுகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் ரைட்டர்களின் மறுபக்கத்தை சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் பொறுப்புகளையும்  சொல்லி காவல்துறை அதிகாரிகளின் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது என்பதை ஆழமாகச் சிந்திக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சங்கம் கண்டிப்பாக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஃபிராங்ளின் ஜேக்கப். காவல் துறை அதிகாரத்தின் கோர முகம், சாதிய ஆணவம், மறைக்கப்பட்ட அநீதிகள்  அண்ணன் –தம்பி பாசம், அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வலியும் வேதனையும் என்று சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும், வாழ்க்கையில் ஜெயித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற சிந்தனையும் அற்புதமாக காண்பித்து முடித்திருக்கும் விதம் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. படத்தின் பலமே திரைக்கதை உருவாக்கம். எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகள் இருந்தாலும் அதனை ரசிகர்களுக்கு தொய்வு ஏற்படாதவகையில் கொண்டு சேர்த்திருக்கிறது படக்குழு. காவல்துறையே காவல்துறையின் கருப்பு பக்கங்களை பேசும் வகையில் சாதுர்யமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்பட்டுள்ள இயக்குநர் ஃபிராங்ளின் ஜேக்கப்க்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், கோல்டன்ரேஷியோ பிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், ஜெட்டி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித், அபையானந் சிங், பியூஷ் சிங், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரித்துள்ள ரைட்டர் இளைய தலைமுறை அனைவரும் அவசியம் பார்த்து எதிர்காலத்தில் சமூகங்களையும், தனிநபர்களையும் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை சொல்லும் படம்.