புதிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மொழிகளையும், பன்முகத் திறன்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது: பிரபல கல்வியாளர்கள் கருத்து

0
281

புதிய கல்விக் கொள்கை என்பது அனைத்து மொழிகளையும், பன்முகத் திறன்களையும் ஊக்குவிப்பதாக உள்ளது: பிரபல கல்வியாளர்கள் கருத்து

ஆகஸ்ட், 15, 2020

தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து இன்று நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் பேசிய கல்வியாளர்கள், இந்த கல்விக் கொள்கை அனைத்து மொழிகளையும் சமமான முக்கியத்துவத்துடன் ஊக்குவிப்பதாகவும், தொழில் திறன்கள் அடிப்படையிலான பன்முகக் கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதாகவும் உள்ளது என்று கூறினர்.

மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிகை தகவல் மையம் சார்பில் இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்சியைச் சேர்ந்த காவேரி மகளிர் கல்லூரி கூடுதல் பேராசிரியர் டாக்டர் .எஸ். தாமரைச்செல்வி, பெங்களூரைச் சேர்ந்த அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகக் கூடுதல் பேராசிரியர் திரு. பி.எஸ். ரிஷிகேஷ், அதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு கூடுதல் பேராசிரியர் திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் சிறப்புரை ஆற்றினர்.

சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குநர் திரு. குருபாபு பலராமன் வரவேற்றார். தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு மேன்மையான அம்சங்கள் குறித்து இந்த இணையவழிப் பயிலரங்கில் தெரிவிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத் தென் மண்டலத் தலைமை இயக்குநர் திரு. எஸ். வெங்கடேஸ்வர் தலைமை உரை நிகழ்த்தினார்.  அனைவரும் ஈடுபாடு கொள்ள வேண்டிய முக்கியமான துறைகளில் ஒன்றாக, கல்வி இருக்கிறது என்று அவர் கூறினார். “மூன்றரை தசாப்த காலத்திற்குப் பிறகு, இந்தக் கொள்கையின் மூலம் அரசு துணிச்சலாக மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. பல கிராமப் பஞ்சாயத்துகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பேராசிரியர்கள், மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுடன் விரிவான கலந்தாலோசனை செய்த பிறகு இது அமல் செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.

முந்தைய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட 1980 காலக்கட்டத்துடன், இப்போதைய சூழ்நிலையை ஒப்பீடு செய்த திரு. வெங்கடேஸ்வர், “இப்போது இன்டர்நெட் வசதி அதிகமாகப் பரவியுள்ளது, நிறைய பல்கலைக்கழகங்கள் உள்ளன. நமது மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே உலக அளவில் போட்டியில் நீடித்திருப்பதற்கு, இதுபோன்ற அம்சங்களைக் கொண்ட மாறுபட்ட ஒரு கல்வி முறை தேவைப்படுகிறது. அனைவருக்கும் நல்லதாக இருக்கும் துடிப்பான ஒரு கல்வி முறை நாட்டுக்குத் தேவைப்படுகிறது. அதனால் தான் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிமுகம் செய்யப்பட்டது” என்று கூறினார்.

திருக்குறள், புறநானூறு நூல்களை மேற்கோள் காட்டிய டாக்டர். எஸ். தாமரைச்செல்வி, மனிதர்களின் வாழ்வில் எந்த அளவுக்குக் கல்வி முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை விவரித்தார். “இன்றைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினரிடம் வலுவான அடித்தளத்தை நாம் உருவாக்க வேண்டும். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ நாம் பார்க்க வேண்டும். தொடக்கக் கல்வி நிலையில் சிந்தனையாக்கம், உயர்நிலையில் ஆராய்ச்சி மற்றும் புதுமைச் சிந்தனை ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கினார்.

காவேரி மகளிர் கல்லூரி கூடுதல் பேராசிரியை டாக்டர் தாமரைச்செல்வி, தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழிப் பயிலரங்கில் காட்சி அமைப்புகளுடன் விளக்கங்கள் அளித்தார்.

இந்தக் கொள்கையை உருவாக்கியதில் நாடு முழுவதிலும் பலரும் நிறைய பணியாற்றியுள்ளனர் என்று திரு. பி.எஸ். ரிஷிகேஷ் கூறினார். “இந்தக் கொள்கையை உருவாக்கும் பணிகள் ஐந்து ஆண்டு காலமாக நடந்தன. இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளுக்குப் பிறகு, கிராமப் பஞ்சாயத்து, மாவட்டம், மாநிலம் மற்றும் பிராந்திய அளவில் அரசாங்கம் கலந்தாய்வுகள் நடத்தியது. வரைவுக் கொள்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்பு பெருமளவிலான கல்வியாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

வரைவு அறிக்கை 400 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ள நிலையில், இதன் கொள்கைகள் சுமார் 70 பக்கங்களாக உள்ளன. “அரசு கவனமாக பரிசீலனைகள் செய்து, வரைவு அறிக்கையில் இருந்து முக்கியமான அம்சங்களை எடுத்து, தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட விஷயம் குறித்தும், யாருக்காவது விளக்கங்கள் தேவைப்பட்டால், வரைவு அறிக்கையில் அவற்றைப் பெற முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியர் திரு. பி.எஸ். ரிஷிகேஷ், தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த  இணையவழிக் கருத்தரங்கில் பேசுகிறார்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கூடுதல் பேராசிரியரான  திரு. பி.எஸ். ரிஷிகேஷ், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கல்வி மற்றும் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். “மாணவர்கள் கொஞ்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கற்க விரும்பினால், புதிய நடைமுறையில் அதற்கான வழிமுறை உள்ளது. கல்வியில் இருந்து நின்று கொள்ள மாணவர் விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. அந்த மாணவர்கள் வெளியே சென்று நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு, வெளியேறிய நிலையில் இருந்து மீண்டும் கல்வியைத் தொடர திரும்பி வர முடியும்” என்று அவர் தெரிவித்தார். சுதந்திரமான மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி முறையை ஊக்குவிப்பதாக தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளதாக அவர் கூறினார்.

கல்வித் தத்துவத்தில் நிபுணரான திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி, எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கொள்கை உள்ளது என்று தெரிவித்தார். “குழந்தைகளால் நிறைய மொழிகளைக் கற்க முடியும் என்றும், அவ்வாறு படிப்பதால் அவர்களுடைய அறிவும், கண்ணோட்டமும் மேம்படும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. அதை ஏன் தடுக்க வேண்டும்? காலனி ஆதிக்கம் மற்றும் இதர வரலாற்றுக் காரணங்களால் ஆங்கிலமும், பிற மொழிகளும் நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பல மொழிக் கொள்கை என்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியர் திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் பத்திரிகை தகவல் மையம் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த  இணையவழிக் கருத்தரங்கில் பேசுகிறார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-இல் தொழில்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கு அப்பாற்பட்டு, நடைமுறையில் தேவைப்படும் மொழிகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று திரு. ராமச்சந்தர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். “ஒருவருக்கு தாவரவியல் தெரியும் என்பதற்காக, அவரால் விவசாயம் செய்ய முடியுமா” என்று அவர் கேட்டார். செய்முறையுடன் இணைந்த கல்வி முறையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். எவற்றைப் படிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக இந்தக் கொள்கை இருக்கிறது. “யார் மீதும் எதுவும் திணிக்கப்படாது” என்று அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு. ஜே. காமராஜ் நன்றி கூறினார்.