கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0
147

கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதுவரை 24.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாளுடன் (ஜூலை 31) ஊரடங்கு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பது மற்றும் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் , தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்டங்களுக்குள் அல்லது மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படலாம் எனவும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பரிசோதனையில் முதலிடம்:

ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேவையான தளர்வுடன் தமிழகத்தில் ஊரடங்கை பாதுகாப்பாக அமல்படுத்தி வருகிறோம். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க, மக்களுக்கு சித்த மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 73 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலக்கட்டத்திலும் ரூ.30,500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.