‘வெளியே வரக்கூடாது’ – கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாசலை தகரத்தால் அடைத்த அவலம்!!

0
128

‘வெளியே வரக்கூடாது’ – கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாசலை தகரத்தால் அடைத்த அவலம்!!

பெங்களூருவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருக்க, அவர்களின் வீட்டு வாசல்களில் தகரங்களை பொருத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் தாய்,இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தம்பதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒரு வீட்டில் தாயும் குழந்தைகளும், இன்னொரு வீட்டில் வயதான தம்பதியும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் வெளியே வராமல் இருக்க, அவர்களின் வீட்டின் வாசலை அடைக்கும் வகையில் தகரங்களை பொருத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை சதிஷ் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இம்மாதிரியான தகரங்களை அவர்கள் வீட்டின் முன் பொருத்தும் போது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் எப்படி வெளியேற முடியும் என்றும் இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறி, அதில் முக்கிய அதிகாரிகள் மற்றும் கர்நாடக முதல்வரையும் டேக் செய்திருந்தார். இதனை பார்த்த அதிகாரிகள்  தகரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

இது குறித்து அங்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருக்கும் மூத்த அதிகாரி டி பசவராஜு கூறும் போது  ஏன் இப்படி செய்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் எனது கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தகரங்களை அகற்றச் சொல்லி விட்டேன். நான் தடைசெய்யப்பட்ட தெருக்களில்தான் தகரங்களை அமைக்கச் சொன்னேன். தனி வீடுகளில் இதைச் செய்ய சொல்லவில்லை என விளக்கமளித்தார்.

இது குறித்து அப்பகுதி மாவட்ட ஆட்சியரான மஞ்சுதா பிரசாத் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது “ தனி வீடுகளில் பொருத்தப்பட்ட தகரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இங்கு வாழும் அனைவரையும் கண்ணியமாக நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும், பாதிக்கப்படாதவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.