ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

0
270

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமனித இடைவெளியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அயோத்தி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.
இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றனர்.

 

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.