மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய 6-ஆம் கட்ட ஊரடங்கு 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. பொது போக்குவரத்து மற்றும் மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பது உள்பட, பல தளர்வுகளை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினர் காத்திருக்கின்றனர்.
அதே சமயம், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு என்ன செய்ய உள்ளது என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக ஆலோசித்த முதலமைச்சர், தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கை கவனமாகவும், பாதுகாப்பாகவும் அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார். மேலும், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.