மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

0
103

மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது

”உலகத்தின் பல நாடுகளிலும் விடுதலை போராட்டங்கள் நடந்துள்ளன. 1789ல் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சி உலக வரலாற்றை மாற்றி எழுதிய போராட்டம் ஆகும். என்றாலும் இது வன்முறையின் ஆணிவேரிலிருந்து உதித்தது. சுமார் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ரத்த ஆறு ஓடிய வன்முறையின் மூலம்தான் அந்த நாட்டிற்கு விடுதலை கிடைத்தது. சீனப்புரட்சி, ரஷ்ய புரட்சி போன்றவற்றிலும் வன்முறை இருந்தது. ஆனால் இந்தியாவில்தான் சுதந்திரப் போராட்டம் அகிம்சை முறையில் நடைபெற்றது. மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது”, என்று காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் காந்திய ஆராய்ச்சி மையத்தின் முனைவர் ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பெற்ற மெய்நிகர் காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது ரவிச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்திய சுதந்திரத்தையும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் நினைவு கூர்வோம்”, “சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள்; திட்ட அறிக்கை சமர்ப்பித்தல், மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள்” மற்றும் “மின்னணு சந்தை” என்ற தலைப்புகளில் மெய்நிகர் காணொலி கருத்தரங்கத்தை மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் இன்று (06.08.2020) மதுரை நேரு யுவ கேந்திரா அலுவலகம் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு நடத்தியது.

திரு. ரவிச்சந்திரன் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய மதுரை ரூட்செட் நிறுவனத்தின் இயக்குனர் திரு ரவிக்குமார் சுயசார்பு இந்தியா திட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஏற்கனவே நடத்தி வரும் தொழில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மத்திய அரசின் உத்திரவாத்தின் கீழ் எந்தவித பிணையமும் இன்றி வங்கியில் கடன் வாங்கலாம் என்றும் இதற்காக ரூபாய் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். நலிவுற்ற தொழில்களுக்கு மத்திய அரசின் கடன் உத்திரவாத டிரஸ்ட் மூலமாக பகுதி உத்திரவாத கூடுதல் கடன் பெறலாம். இதற்காக 20000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு 30000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்நிறுவனங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார். ரூட்செட் நிறுவனம் மூலமாக நடத்தப்படும் ஆண் பெண் இருபாலருக்கான இலவசத் தொழில் பயிற்சிகள், இத்தொழில்களில் தற்போதுள்ள வாய்ப்புகள், வங்கி திட்ட அறிக்கை சமர்ப்பித்தல், உதயம் செயலி மூலம் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்தல், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், பிரதமந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோருக்கான கடன் திட்டம் மற்றும் முத்ரா கடன் திட்டம் குறித்தும் ரவிக்குமார் விளக்கமளித்தார்.

மின்னணு சந்தை குறித்துப் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மதுரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு பாண்டியராஜன் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் புதிய விளம்பர சாதனங்களான டுவிட்டர், பேஸ்புக், ஈமெயில், வாட்ஸ்அப், மொபைல், கூகுள், வெப்சைட் மற்றும் 150% விசாரணை மூலமாக உற்பத்திப்பொருட்களை எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பதை விளக்கியவர் இதற்கான உதவிகளை தனது நிறுவனம் செய்வதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிக்கு தலைமைவகித்து பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு இணை இயக்குனர் திரு ஜெ.காமராஜ், கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியில் அனைத்தும் முடக்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு, தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பயன்பெறும் வகையில், 20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளது என்றும் எனவே இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். இந்தியா எந்த ஒரு நாட்டையும் சாராமல் சுயசார்போடு இருக்கமுடியும் என்று அண்மையில் பிரதமர் கூறியதைச் சுட்டிக்காட்டிய காமராஜ் இந்த நோக்கத்தை நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் அடைய முடியும் என்று கூறினார். நிகழ்ச்சியில் திரைபடப்பிரிவு தயாரித்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த குறும்படத்தை இணை இயக்குனர் காமராஜ் திரையிடச் செய்தார்.

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்ததோடு, வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார்.

மதுரை மாவட்ட இளையோர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வங்கிசார் அலுவலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனப் பணியாளர்கள், தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.