பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் : அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை!

0
70

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினம் : அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 56-வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.

காஞ்சி தந்த காவியத் தலைவர், அறிவுலக மேதை , உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னிர்செல்வம், இராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு , மெய்யநாதன் கயல்விழி செல்வராஜ் , மதிவேந்தன். மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் ,துணை மேயர் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், மெரினாவில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!

வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://x.com/mkstalin/status/1886268923957711294

மேலும், “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.” தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.