புதிய தேசிய கல்வி கொள்கை… தீவிரமாக எதிர்க்கும் திமுக!

0
112

புதிய தேசிய கல்வி கொள்கை… தீவிரமாக எதிர்க்கும் திமுக!

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் புதிய கல்வி கொள்கையை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவருகின்றன. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைகள் பின்பற்றப்பட்டுவரும் நிலையில், மும்மொழி பாடத்திட்டங்களுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பி வருகிறார். ‘அண்ணாவின் பெயரை கட்சியில் தாங்கியிருக்கும் அதிமுக, அவர் ஆதரித்த இருமொழி கல்வித் திட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?’ என்பது ஸ்டாலினின் கேள்வி.

ஆனால், தமிழக முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், உயர்க் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறார்கள். இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்ததையும் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார். புதிய தேசிய கல்வி கொள்கையில் அதிமுக மெளனம் காத்துவரும் நிலையில், இதுபற்றி முதல்வருடன் பேசிய பிறகு நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று உயர்க் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், “இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க முடியாது” என்று அதிமுக எம்.பியும் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்சித் தலைமை விரைவில் நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். அதே வேளையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியிருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகிறது. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவே அதிமுக தலைமை காலம் தாழ்த்தி வருவது புதிராக உள்ளது.