பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு செய்வார்: செங்கோட்டையன் பேட்டி

0
98

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு செய்வார்: செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு, செப். 25–

பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அமைச்சர் செங்கோட்டையன் 54 பேருக்கு கடன் உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், அக்டோபர் 1 முதல் பள்ளி பாடங்களில் சந்தேகம் இருக்கும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதலுடன் சென்று ஆசிரியரிடம் விளக்கம் கோரலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது விருப்பம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்காக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை மட்டுமே முடிவு செய்ய இயலாது. பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய் துறை ஒருங்கிணைந்து இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். எனவே முதலமைச்சர் பள்ளிகள் திறப்பது குறித்து உயர்மட்ட குழுவை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். இப்போது வெளியிடப்பட்ட அரசு ஆணை மாணவர்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு பெறலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்வார். தற்போது வெளியிடப்பட்ட அரசு ஆணை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

சந்தேகங்களை கேட்க தொலைபேசி எண்

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி எண் 1474 தொடர்பு கொண்டு முதுநிலை ஆசிரியர்களிடம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். இதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் அங்குள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பள்ளி மூடப்படாமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டுள்ளது. அவர் அதை பரிசீலித்து மேலும் பாடங்கள்குறைக்க வேண்டுமா என்பது குறித்தும் முடிவு செய்வார், இவ்வாறு அவர் கூறினார்.