நிஜ ஹீரோக்களை தான் போற்ற வேண்டும் – சத்யராஜ் பேச்சு

0
141

நிஜ ஹீரோக்களை தான் போற்ற வேண்டும் – சத்யராஜ் பேச்சு

சத்யராஜ் நாயகனாக நடிக்க, ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை தீரன் இயக்குகிறார். ‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத்தொகுப்பை சரத் கவனிக்கிறார்.

டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், சிபிராஜ், மயில்சாமி, சந்துரு, எஸ்.ஏ. சந்திரசேகர், திலகவதி ஐபிஎஸ், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அதுசார்ந்த விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் சத்யராஜ் பேசுகையில், நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க. கை தட்டுங்க. ஆனால், நிஜ ஹீரோக்களைத்தான் போற்ற வேண்டும் என்றார்.

“வேதம் புதிது படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினையை எம்ஜிஆர் தீர்த்துவைத்தார். அதேபோன்று பெரியார் படத்திற்கும் பிரச்சினை வந்தது. பெரியார் படம் வெளியானதற்கு காரணம் சந்துரு. தணிக்கைச் (சென்சார்) சான்றிதழ்கள் தற்போது பல வடிவங்களில் உள்ளன. அதனால் மேடையில் பேசும்போது பார்த்து பேச வேண்டியுள்ளது. பெரியார், அம்பேத்கர் படங்கள் உள்ள திரைப்படங்கள் வெற்றிபெறுகின்றன. சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறுகின்றன. ஆங்கிலம் பேசுவது என்பது அறிவுக்காகத்தான்” என்றார்.

‘நீதியரசர் சந்துரு அவர்களே சர்டிபிகெட் குடுத்திட்டார், தீர்ப்புகள் விற்கப்படலாம் டைட்டில் ஓகே’ என்றார்.

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி., பேசுகையில், “1980களிலேயே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றொரு படம் எடுத்தேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான். உதவி இயக்குநராக இருந்தபோது என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளில் வள்ளுவர் கோட்டம் வழியாக வந்துகொண்டிருந்தேன். அப்போது சிக்னல் கிடையாது. போக்குவரத்துக் காவலர் ஒருவர் நின்றுகொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். நான் வரும்போது ஸ்டாப் என்று எழுதப்பட்டிருந்த போர்டைக் காட்டி வாகனங்களை நிறுத்தத் சொன்னார். நான் அதைக் கவனிக்காமல் சென்று அந்த போர்டை இடித்து வண்டியை நிறுத்தினேன். உடனே அவர் கெட்டவார்த்தையில் திட்டி, ‘நான் நிறுத்த சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ போய்கிட்டே இருக்க…’ என்றார். ‘தெரியாமல் வந்துவிட்டேன் சார்’ என்று நான் கூறியும் தொடர்ந்து என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் என்னை திட்டிக்கொண்டிருக்கையில், ஒரு கார் எங்களை வேகமாக கடந்து சென்றது. நான் உடனே, ‘என்னைப் பிடிச்சீங்களே… அந்தக் கார்காரனை ஏன் பிடிக்கவில்லை’ என்றேன். அதற்கு அவர், ‘அவன் பின்னால் என்ன ஓடச் சொல்றியாடா’ என்றார். ‘கார் வைத்திருந்தால் அவனுக்கு சட்டம் வளையும். என்ன மாதிரி ஏழை பசங்க சைக்கிள்ல வந்தா பிடிச்சுக்குவிங்க… அப்படித்தான’ என்று கூற, ஓங்கி அடித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” எனக் கூறினார்.