தியேட்டர்களை எப்போது திறக்கலாம்?: திரையரங்க பிரதிநி‌திகளுடன் மத்திய அரசு இன்று பேச்சு

0
78

தியேட்டர்களை எப்போது திறக்கலாம்?: திரையரங்க பிரதிநி‌திகளுடன் மத்திய அரசு இன்று பேச்சு

நாடு முழுவதும் திரையரங்குகளை திறப்பது குறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், காணொலி மூலமாக இன்று கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துகிறது. திரையரங்குகளை மீண்டும் திறந்தால் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், திரையரங்கு டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விற்க வேண்டும் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு இருக்கைக்கும் மறு இருக்கைக்கு இடையே சீலிட உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு காலை, நண்பகல் என இரு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏசி-க்களை இயக்க அனுமதி வழங்காமல், கதவுகள் திறந்த நிலையில் மட்டுமே திரைப்படம் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இடைவேளை நேரத்தில் தின்பண்டம் வாங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், திரையரங்கிற்கு உள்ளேயே திண்பண்டங்களை வழங்க அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, திரையரங்க உரிமையாளர்களும் சில பிரதான கோரிக்கைகளுடன் இந்த கூட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது, குறைந்தபட்சம் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், குடும்பமாக வரும் ரசிகர்களை ஒரே வரிசையில் அமர வைக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.

மேலும், ஒரே நாளில் 4 காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்றும், ஜிஎஸ்.டி வரியை குறைப்பதோடு, கேளிக்கை வரியை நீக்க மாநில அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் கோர உள்ளனர்.அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி இருக்கும் நிலையில், கேளிக்கை வரியும் வசூலிப்பது, நசிந்து போயிருக்கும் சினிமாத் தொழிலை மேலும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.