தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

0
131

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு

சென்னை: கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கில் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், உரிய காரணங்களுக்காகவும் வெளியில் வர அனுமதி உண்டு.

அதனை போலீசார் கண்காணித்து சரியான காரணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியில் வந்தால், அந்த வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும். சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 21, 28, ஜூலை 5, 12, 19, 26 மற்றும் கடந்த 2-ந் தேதியுடன் 7 முறை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் இன்று 8-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு நாளான இன்று சென்னையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். அவசியமின்றி வெளியில் வருபவர்களை பிடித்து, அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றியதாக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.