சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் – விஜயகாந்த்
சென்னை: இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1886-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இதனை மாற்றியமைத்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் அது பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையால் (இ.ஐ.ஏ 2020-ஐ) தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுக்கு பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு 1986ம் ஆண்டு அமல்படுத்தியது. பின்னர், 2006ம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020 என்ற வரைவு அறிக்கையை கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போக செய்து விட்டன.
மேலும் இச்சட்டம் வலுவாக இருக்கும் போதே சில தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள், மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்று இல்லாமல் மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், மக்களின் கருத்துகளை கேட்காமல், எந்த திட்டத்தையும் தடையின்றி நிறைவேற்ற முடியும். இது பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
நமது நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை. மனித உரிமை ஆணையம் எந்தளவிற்கு வலிமையாக இருக்கிறதோ, அந்தளவுக்கு இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்து, அந்த சட்டத்தின் கீழ் இயங்கும் போது தான், நாட்டிற்கும் நல்லது மக்களும் வரவேற்பார்கள்.
இந்த விவகாரத்தில் சரியான சட்டத்தை கொண்டுவரவில்லை என்றால் நம் விரலால் நம் கண்ணை நாமே குத்துகின்ற நிலைமை வரும்.
எனவே இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை (இ.ஐ.ஏ 2020-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதியுள்ளேன். (இ.ஐ.ஏ 2020-ஐ) மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் நம் விரலால் நம் கண்களை குத்தி காயப்படுத்துவதற்கு சமமாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.