சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா உறுதி

0
134
எஸ்.எஸ்.ஐ பால்துரை (வட்டமிடப்பட்டவர்)

சாத்தான்குளம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா உறுதி

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவில் இடம்பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் சச்சின் மற்றும் தலைமைக் காவலர் சைலேந்திர குமார் ஆகிய இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பவன், அஜய் என்ற இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட இருக்கிறார். அவருடன் இருந்தவர்கள், அவரை அழைத்துச் சென்ற காவலர்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைதாகியுள்ள சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தை, மகன் மரண வழக்கில் மூன்று காவலர்களை வியாழக்கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியிருந்த நிலையில், புதன்கிழமையே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.