கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 2 ஆண்டுகளில் முடிவு வரும் – உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் தொற்று நிலைக்கு இரண்டு ஆண்டுகளில் ஒரு முடிவு வரும் என்று தெரிவித்திருக்கிறார்.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலகெங்கிலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது சுகாதார அமைப்புகளுக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. உலகமெங்கும் பல நாடுகளில் நீண்ட காலத்துக்கு பிறகு புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.
தடுப்பூசி வரும் வரையில் இந்த வைரஸை எந்த நாடும் முழுவதாக வெளியேற்ற முடியாது. கொரோனா தொற்று அழிப்பில் தடுப்பூசி முக்கிய கருவியாக இருக்கும் என்பதை உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.
ஊரடங்கு எந்தவொரு நாட்டுக்கும் நீண்ட கால தீர்வில்லை. அனைத்து நாடுகளும் பொருளாதாரம், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக மீண்டும் தொடங்கும் புதிய கட்டத்துக்கு செல்ல வேண்டும். உலக சுகாதார நிறுவனம், அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட உறுதி கொண்டுள்ளது.
Spanish Flu, 1918-ம் ஆண்டு வந்தபோது, அதன் பாதிப்பைக் கடந்து செல்வதற்கு 2 ஆண்டுகள் ஆனது. கொரோனா வைரஸ் தொற்றும் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.