கொரோனா நோயாளிகளுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆக்சிஜன் வசதி

0
83

கொரோனா நோயாளிகளுக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆக்சிஜன் வசதி

மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் அதிக பாதிப்பு உடைய நபர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் முக்கியமானது. ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது போதுமான அளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதனால், உயிரிழப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கொரோனா வார்டில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்கள் கழிவறைக்கு செல்லும்போது அவர்களுக்கு திடீரென ஆக்சிஜன் குறைவு ஏற்பட நேரிடலாம். இதனால் அதிக பாதிப்பு உள்ளவர்கள் கழிவறைக்கு செல்ல ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் இதற்கு ஏதாவது ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அங்குள்ள கொரோனா நோயாளிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தநிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் வசதிக்காக அங்குள்ள கழிவறையின் வாசல் மற்றும் உள்பகுதியில் புதிதாக ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “கொரோனா நோயாளிகளுக்கு எப்போது மூச்சு திணறல் ஏற்படும் என்பது கணிக்கமுடியாத ஒன்று. அதிக பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமின்றி மிதமான பாதிப்பு இருப்பவர்களுக்கும் மூச்சுதிணறல் ஏற்படலாம். தற்போது, கழிவறையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், கொரோனா நோயாளிகள் கழிவறைக்கு செல்லும் போது மூச்சுதிணறல் ஏற்படுவது தவிர்க்கப்படும். இது இங்குள்ள அனைத்து நோயாளிகளுக்கும் பயன் அளிக்கும். இதனால் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும்” என்றனர்.