கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை உடல்நிலை சீராக உள்ளது – கென் கருணாஸ்
எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்- கருணாஸின் மகன் வேண்டுகோள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கென் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா விட்டுவைப்பதில்லை. ஏற்கெனவே களப்பணியாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்திருக்கும் நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்க்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு தொற்று பாதிப்பு இருந்ததை அடுத்து கருணாஸூக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Ken Karunaas (@KenKarunaas) August 6, 2020
அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,“என் தந்தை அரசியல்வாதியாக இருப்பதால் கடந்த சில நாட்களாக அவரது தொகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்றதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.