கொடைக்கானல் ஏரியில் சூரி, விமல் மீன்பிடித்த விவகாரம் : 3 பேர் பணிநீக்கம்
சூரி, விமல் உட்பட நான்கு நபர்களுக்கு தலா 2000 ஆயிரம் ரூபாய் அபராதம்
கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் சென்று நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் மீன் பிடித்த விவகாரத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஈ பாஸ் பெறாமல், நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவர் உட்பட சிலர் வந்து தடைசெய்யப்பட்ட, பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் முகாமிட்டதாக புகார் எழுந்தது. முகாமிட்ட அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்த சூழல் காவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என மூன்று பேர் உள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, “நடிகர்கள் தரப்பினர் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி கோரியது. ஆனால் வனத்துறை அனுமதி மறுத்தது. ஆனால் அவர்கள் சூழல் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவர்கள் உதவியுடன் பேரிஜம் சென்று இந்த குற்ற செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சூரி, விமல் உட்பட நான்கு நபர்களுக்கு தலா 2000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூன்று தற்காலிக வன பணியாளர்களான சைமன்பிரபு, செல்வம் மற்றும் அருண்பாண்டி ஆகியோர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.