கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

0
88

கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

செங்குன்றம்:

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தொடர்ந்து ஆந்திர அரசு அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று இரவு 8 மணிக்கு வந்தடைந்தது. தமிழக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சண்முக சுந்தரம், உதவி பொறியாளர்கள் மற்றும் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி கிருஷ்ணா தண்ணீரை வரவேற்றனர்.

முதலில் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். இந்த நீர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று(திங்கட்கிழமை) வந்து சேரும் என்று தெரிகிறது. கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் வறண்டு கிடந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.