காடன் விமர்சனம்

0
6

காடன் விமர்சனம்

தனக்கு சொந்தமாக காட்டை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு காடனாக சுற்றித்திரியும் ராணா அங்கு வாழும் விலங்குகளுக்கும் அடர்ந்த மரங்களுக்கும் பாதுகாவலனாக வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரி தன் கனவு திட்டமான நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்பு கட்ட அந்த காட்டை தேர்ந்தெடுத்து வேலைகளை தொடங்குகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காடன் ஆவணங்கனை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்பித்து தடை உத்தரவை பெறுகிறார். இதனால் ஆத்தரமடையும் மத்திய மந்திரி வியூகம் அமைத்து காடனை மனநல காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். இந்த இடைவேளியில் காட்டில் குடியிருப்பு பகுதியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி விடுகிறார். காப்பகத்திலிருந்து வெளியே வரும் காடன் எவ்வாறு போராடி காட்டையும், யானைகளின் வழிதடத்தையும் மீட்டார் என்பதே மீதிக்கதை.

காடனாக வித்தியாசமான கெட்டப்பில் ராணா டக்குபதி, பாகனாக விஷ்ணு விஷால், தீவரவாதி மலைவாழ் பெண்ணாக ஜோயா ஹுசைன், பத்திரிகையாளராக ஷிரியா பில்கவுன்கர், மத்திய மந்திரியாக அனந்த் மகாதேவன், ரகுபாபு, ரவி காலே, ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம்,போஸ் வெங்கட் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் உத்தரவாதமான  நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

அசோக் குமார் ராஜியின் ஒளிப்பதிவு, சாந்தனு மோயித்ரா இசையும், ரசூல்பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பும் படத்தின் உயிரோட்டமான காட்சிக் கோணங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக கொண்டு யானைகளை வைத்து அசத்தலான திரைக்கதையமைத்து அதற்காக பல தடைகற்கள், தடங்கல்களை தாண்டி அற்புதமான படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். காட்டின் முக்கியத்துவத்தையும், விலங்குகளின் பங்களிப்பையும் உதாசீனப்படுத்தாமல் பாதுகாப்பாக அரவணைத்து வாழ்வதே சிறந்தது என்பதை சொல்ல வந்து பல இடங்களில் முழுமையாக சொல்ல முடியாமல் பாதிபாதியாக நின்றது போல் காட்சிகள் இருப்பதால் விறுவிறுப்பு குறைந்து திருப்தி ஏற்பாடாத எண்ணமே மேலோங்குகிறது. இருந்தாலும் இப்படிப்பட்ட படத்தை இயக்குனர் பிரபு சாலமன் ஒருவரால் மட்டுமே முயற்சி செய்து யானைகளை வைத்து பிரம்மாண்டமாக எடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். அவரின் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும்.

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் காடன் இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்ச்சி  ஏற்படுத்த புறப்பட்ட கரடுமுரடான காட்டை பாதுகாக்கும் காவலன்.