ஒருநாடு – ஒரு ரேஷன் கார்டு திட்டம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாத சம்பள ஊழியர்களுக்குப் பலனளிக்கும்

0
118

ஒருநாடு – ஒரு ரேஷன் கார்டு திட்டம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாத சம்பள ஊழியர்களுக்குப் பலனளிக்கும்.

தமிழ்நாடு நியாய விலைக்கடைகளில் கைரேகை மூலம் அங்கீகரிக்கும் பணி ஒரு மாத காலத்திற்குள் நிறைவடையும்.

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31, 2020

கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நிலவி வரும் இந்த நேரத்திலும் கூட தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அனைவருக்குமான உணவை உறுதிப்படுத்தியுள்ளது. ஊரடங்கின் போது உதவி தேவைப்படுவோரின் துயரங்களைத் துடைக்கும் வகையில், 2020 நவம்பர் வரையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு மாதம் தோறும் நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி/கோதுமை இலவசமாக வழங்கப்படும் என நமது பிரதமர் அறிவித்திருந்தார்.

மத்திய அரசு அறிவித்திருந்த சுயச்சார்புமிக்க இந்தியா உதவித் தொகுப்பின் கீழ் நாடு முழுவதிலும் 2.5 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் உணவு தானியங்களைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதிலும் அமலாக்கப்படவுள்ள ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டமானது வேலைக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், வேலை மாற்றலாகிச் செல்லும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது ஆந்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் ஒரு நாடு – ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. வரும் அக்டோபர் மாதத்திற்குள் தமிழ்நாடு மாநிலமும் இத்திட்டத்தை அமலாக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இம்மாநிலத்தில் 34,773 நியாய விலைக்கடைகள் உள்ளன. இங்குள்ள 2.85 கோடி குடும்ப அட்டைகள் 6.74 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டதாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த அனைத்து ரேஷன் அட்டைகளும் 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் முறையிலான நுண்ணறி அட்டைகளாக மாற்றப்பட்டிருந்தன. மாநிலத்தில் விற்பனையை இணையவழியாக உறுதிப்படுத்தும் கருவிகள் கைரேகை மூலமாக அறுதிப்படுத்தும் பணி அடுத்த மாதம் முழுமையாக அமலாக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு சில வட்டங்களில் நியாய விலைக் கடைகளில் கைரேகை மூலம் பயனாளிகளை அறுதிப்படுத்தும் பணி கடந்த திங்கள்கிழமையிலிருந்து தொடங்கியுள்ளது. இந்தக் கடைகளில் தற்போது செயல்பட்டு வரும் விற்பனையை இணைய வழியாக உறுதிப்படுத்தும் கருவிகள் மேம்படுத்தப்பட்டு, கைரேகையை அடையாளப்படுத்தும் கருவியுடன் ஒன்றிணைக்கப்படும். பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த ஒன்றிணைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

அமைப்பு ஒன்றிணைப்பான் மூலம் விற்பனையை இணைய வழியாக உறுதிப்படுத்தும் கருவிகளை மாற்றியமைத்து மேம்படுத்துவதற்கான உத்தரவினை தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அளித்துள்ள தகவல்களின் படி நியாயவிலைக்கடை ஊழியர் விற்பனையை இணையவழியாக உறுதிப்படுத்தும் கருவிகளை இயக்கும் செயலியை இயக்கத் தொடங்கியதுமே இந்தக் கைரேகை மூலமாக அறுதிப்படுத்தும் சேவைகளும் தானாகவே அதனோடு இணைந்து இயங்கத் தொடங்கி விடும்.

விற்பனைக்கான முகப்பில் விற்பனைக்கான தேர்வு தெரிவு செய்யப்பட வேண்டும். பின்பு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுண்ணறி அட்டை நுட்பமாகப் பதிவு செய்யப்படும். பின்பு பொருள்களை வாங்க வந்துள்ள குடும்ப உறுப்பினர் தேவைப்படும் பொருள்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கைரேகையின் மூலம் அறுதிப்படுத்த வேண்டிய முறைமை குறித்த அறிவுறுத்தல் திரையில் தோன்றும். கைரேகையை சோதிக்கும் ஒரு சிறு கருவியின் மூலம் கைரேகையை அறுதிப்படுத்தும் பணி நிறைவுறும். இந்தக் கைரேகையை அறுதிப்படுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவுறவில்லையெனில், அதை அறுதிப்படுத்துவதற்கென ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய கடவுச்சீட்டு முறை பயன்படுத்தப்படும். இதன் மூலம் இறுதியில் கைரேகை அறுதிப்படுத்தும் பணி நிறைவுற்றால் மட்டுமே, பயனாளி வேண்டிய பொருள்களைத் தரமுடியும்.

ஊரடங்கு காலத்தில் ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்குவதை இதனால் பயனடைந்தோர் வரவேற்றதோடு, அரசுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லஷ்மி, கரூர் மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், கரூர் மாவட்டம் மிலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி பரமேஸ்வரி ஆகியோர் இலவச ரேஷன் வழங்குவதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, ஒருநாடு ஒரு ரேஷன் அட்டை என்ற திட்டத்திற்கான முன்முயற்சியையும் பாராட்டினர். சுயசார்பு மிக்க இந்தியா திட்டத்தின் மூலம் ஏழைகள், பின் தங்கிய பகுதியினர் ஆகியோரின் கவலைகளை தீர்க்க மத்திய அரசு உடனடியாக செயலில் இறங்கியது. அவ்வகையில் ஒரு நாடு – ஒரு ரேஷன் அட்டை போன்ற திட்டங்கள் அரசின் இத்தகைய முயற்சிகளை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதோடு, உதவி தேவைப்படுவோர் அதை உடனடியாகப் பெறுவதை உறுதிப்படுத்தும் பணியையும் நிறைவேற்றுகின்றன.