எம்.பி.பி.எஸ். வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தலாம் : தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

0
110

எம்.பி.பி.எஸ். வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தலாம் : தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

சென்னை, அக்.2-–

கொரோனா பரவல் நேரத்தில் எம்.பி.பி.எஸ். வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகள், இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. தற்போது இந்த கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகள் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வட்ஸ் நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் டீன் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:–-

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளை ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்த ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான பாட வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன.

கொரோனா பரவல் நேரத்தில் மட்டும் எம்.பி.பி.எஸ். பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுக்க அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பாட வகுப்புகள் செல்லத்தக்க ஒன்றாகும். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த பாட வகுப்புகளுக்கு தேவையான செய்முறை (பிராக்டிக்கல்) மற்றும் மருத்துவ பயிற்சி (கிளினிக்கல் டிரெயினிங்) போன்றவை கல்லூரி திறந்த பிறகு மருத்துவமனைகளில் நடத்தப்படும்.

வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகம், எம்.பி.பி.எஸ். படிப்பை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தி வருவது குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த பதிலின் அடிப்படையிலேயே ஊடகங்கள் அதுபோன்று செய்தியை முன்பு வெளியிட்டு இருக்கின்றன என்று விளக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.