உள்ளாட்சி தேர்தலில் அனல் பறக்கிறது- கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம்

0
60

உள்ளாட்சி தேர்தலில் அனல் பறக்கிறது- கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சி பகுதிகளில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 7,621 வார்டுகளிலும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி களத்தில் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறியதை அடுத்து அ.தி.மு.க. தனித்து களம் இறங்கி இருக்கிறது.

பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க. ஆகிய 6 கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் தேர்தல் களத்தில் 8 முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் சார்பில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்று முதல் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் களம் பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் (17-ந்தேதி) ஓய்கிறது. நாளை இரவு 10 மணிவரையில் தான் அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்கு சேகரித்தால் விதிமீறலாக கருதப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் மக்களை கவர்வதற்காக தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதற்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சென்னை உள்பட தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

சென்னையில் 200 வார்டுகளிலும் வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். கடந்த 2, 3 நாட்களாகவே பிரசார களத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக சுழன்று பணி செய்து வந்தனர்.

இந்தநிலையில் இன்றைய பிரசாரம் அனைத்து பகுதிகளிலும் களைகட்டி காணப்பட்டது. சென்னையில் களம் இறங்கியுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தனர்.

அப்போது தங்களது சின்னங்கள் பொறித்த துண்டுப்பிரசுரங்களை கொடுத்து மறக்காமல் ஓட்டு போட்டுவிடுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று வேட்பாளர்கள் உறுதிமொழியும் அளித்தனர்.

இப்படி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பொது மக்களை கவருவதற்காக வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இன்று ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக அந்த கட்சிகளை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் பலர் சீட் கிடைக்காத விரக்தியில் தனித்து களம் இறங்கி உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் தி.மு.க.வினர் பலர் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். அவர்களும் தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தேர்தல் களத்தில் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.

இப்படி போட்டி வேட்பாளர்களும் பல வார்டுகளில் வெற்றிபெறும் முனைப்பில் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டு சேகரித்து வருகிறார்கள். அதேநேரத்தில் முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டினர்.

இவர்களும் தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தனர். இதனால் இன்று முக்கிய கட்சி வேட்பாளர்களுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர்களும் வார்டுகளில் வலம் வந்ததை காண முடிந்தது.

அனைத்து வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அவைகளை நான் நிச்சயம் தீர்த்து வைப்பேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வேட்பாளர்கள் அச்சடித்து வினியோகித்து வருகிறார்கள்.

இந்த துண்டுப்பிரசுர பிரசாரமும் இன்று மும்முரமாக காணப்பட்டது. வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் பிரசாரத்துக்காக பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டோர் போடுங்கமா ஓட்டு என்கிற கோ‌ஷத்தை எழுப்பியபடியே இன்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் மோதல் சம்பவங்கள் நடைபெற்று தேர்தல் களம் வன்முறை களமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.