உலக கோப்பையை வென்ற 37-வது ஆண்டு தினம்: ஸ்ரீகாந்தின் நினைவலைகள்

0

உலக கோப்பையை வென்ற 37-வது ஆண்டு தினம்: ஸ்ரீகாந்தின் நினைவலைகள்

இதே ஜூன் 25, 1983 : கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள்.

இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. என்றாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. 2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசைகட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட். அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

ஜூன் மாதம் 25-ந்தேதி இந்திய அணி உலக கோப்பை வென்ற தினமாகும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத மகத்தான நாள் இதுவாகும். இந்தியா உலக கோப்பையை வென்று இன்றுடன் 37-வது ஆண்டு முடிகிறது.

இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆவார். அவர் 57 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார்.

உலக கோப்பை வென்ற நினைவலைகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. இதனால் இந்த இலக்கை எளிதில் “சேஸ்” செய்துவிடுவார்கள் என்று நினைத்தோம்.

அப்போது கேப்டன் கபில்தேவ் எங்களிடம் ‘‘நாம் 183 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி விட்டோம். இருப்பினும் முழுத் திறமையை வெளிப்படுத்தி போராட வேண்டும். வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுவிடக்கூடாது’’ என்றார். அவர் அளித்த இந்த ஊக்கமான வார்த்தைகள் போட்டியில் சாதிக்கத் தூண்டியது. புதிய வரலாறு படைக்க முடிந்தது.

இறுதிப்போட்டியில் நான் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க நல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டது இன்னும் என் மனதில் இருக்கிறது.

நான் சிறிய தவறை செய்துவிட்டேன்.. அதிகமான நம்பிக்கையினால் எனது விக்கெட்டை பறிகொடுத்தேன். ராபர்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த நான் மால்கம் மார்சலுக்கு எல்.பி.டபிள்யூ ஆனேன். நேரடியாக வந்த பந்தில் மோசமான முறையில் ஆட்டம் இழந்தேன். அடுத்த பந்துக்காக காத்திருந்துருக்க வேண்டும். கபில்தேவ் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் இறுதிப்போட்டியில் திருப்புமுனையாகும்.

உலக கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இறுதிப்போட்டிக்கு முந்தைய தினம் இந்திய அணி நிர்வாகிகள் எங்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் இறுதிப் போட்டி பற்றி கவலைப்பட வேண்டாம். போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் உங்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றனர்.

மேலும் இறுதிப் போட்டியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை சாம்பியன் அங்கிகாரத்துடன் களம் இறங்கியது.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.