ஃபார்முலா 4 கார் பந்தயம் : தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்த சினிமா பிரபலங்கள்!
சென்னையில் நாளை நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிக்கு சினிமா பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 31ம் மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் பந்தயம் காரணமாக தமிழ்நாட்டில் கார் பந்தைய விளையாட்டு பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ”சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடத்துவது மிகவும் முக்கியமான நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தேசத்திலேயே முதன்முறையாக நடக்கும் இப்பந்தயத்தை சாத்தியமாக்கியிருக்கிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” சமூகவலைதளத்தில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல்,நடிகர் கமல்ஹாசன் ஃபார்முலா 4 ரேஸ், ”சென்னையில் நடப்பது உற்சாகமானதாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” என்று சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் கார்த்திக்கும் ஃபார்முலா 4 ரேஸ் போட்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், ”திறமை மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிற ஃபார்முலா 4 பந்தயம், அதற்கு தகுந்த இடமான சென்னையில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. இதனை செய்துகாட்டி, வரலாறு படைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.