அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நிறைவு… குழந்தை ராமரின் கண்கள் திறக்கப்பட்டன
அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டைக்காக, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருள்களுடன் வந்தார். பிறகு சாஸ்திரிகள் இவருக்கு சங்கல்பம் செய்து வைக்க, வைபவமானது தொடங்கியது. இவரின் அருகில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் அமர்ந்தார்.
முன்னதாக இவ்வைபவத்திற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் விரதமிருந்து ராமேஸ்வரம் சென்று அங்கு ராமநாதசுவாமியை தரிசனம் செய்ததுடன், புனித நீரை எடுத்து அயோத்தி சென்றார். அப்புனித நீரைக்கொண்டு அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்ற விக்ரஹத்திற்கு அபிஷேகம் செய்தனர்.
பிறகு வேத மந்திரங்கள் ஓத ராமர் சிலையில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. பிறகு தாமரை மலரைக்கொண்டு பிரதமர் பிராண பிரதிஷ்டை செய்தார். அச்சமயம் ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.
ஏன் குழந்தை ராமர் பிரதிஷ்டை? இன்று பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்? பிராண பிரதிஷ்டை என்றால் என்ன?
அயோத்தியாவில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வதற்கு காரணம்…!
ராமர் என்றதும், நெடுந்து வளர்ந்த ஒரு அழகிய ஆண்மகனாய் கையில் வில்லுடன் இருக்கும் ராமரின் காட்சிதான் நினைவுக்கு வரும். காரணம் ராமர் கோவில் அமையபெற்றிருக்கும் மதுராந்தகம், வடுவூர் பத்ராச்சலம், ராமேஸ்வரம் போன்ற ஆலயங்களில் ராமரை கோதண்டராமனாக, கேசவ பெருமாளாக, கல்யாணராமராக பட்டாபிராமராக இப்படிதான் தரிசித்திருப்போம்.
ராமர் கோவில்
ஆனால் அயோத்தியா என்பதுதான் ராமர் பிறந்த ஊர். சரையு நதிக்கரைக்கு அருகில் இருக்கும் அரண்மனையில் ராமர் பிறந்ததாக புராதண கதைகளில் குறிப்பிட்டு உள்ளது. ஆகவே அயோத்தி என்றதும் பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது, ‘அங்கிருக்கும் அரண்மனையில்தான் ராமர் பிறந்திருப்பார். குழந்தையாக ராமர் தவழ்ந்திருப்பார்’ என்பதே. எப்படி கோகுலம் என்றதும் தவழும் கண்ணன் நினைவுக்கு வருவோரோஒ.. அப்படி ராம்ஜன்ம பூமி என்றதும் குழந்தை ராமர் நினைவுக்கு வருவதால், அங்கு குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வதாக சொல்லப்படுகிறது.
பிராண பிரதிஷ்டை
பிரதிஷ்டை என்றால், நிறுவுதல் என்று பொருள்படும். பிராணன் என்றால் உயிர். அதாவது நிறுவிய சிலைக்கு உயிர் தருதல் என்று பொருள்படும். ஆகவே, குழந்தை ராமராக பிரதிஷ்டை செய்யப்படும் திருவுருவத்திற்கு உயிரூட்டப்படுவது பிராண பிரதிஷ்டை
இன்று பிராண பிரதிஷ்டை செய்ய நாள் குறிக்கப்பட்டது ஏன்?
ராமர் சூரியகுலத்தில் பிறந்தவர். சூரியனுக்கு இரண்டு கால பயணங்கள் உண்டு 1.தக்ஷணாயணம், 2. உத்தராயணம். இதில் உத்தராயணகாலம் சூரியனுக்கு உகந்த காலம். தை மாதம் உத்தராயணம் ஆரம்பிக்கப்படுவதால், இன்று அதற்கான நாளை ஆன்மீகவாதிகள் குறித்துள்ளனர்.