8-ஆவது இந்திய புகைப்பட விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் ஜனவரி 15 வரை நீட்டிப்பு

0

8-ஆவது இந்திய புகைப்பட விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் ஜனவரி 15 வரை நீட்டிப்பு

சென்னை, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 8-ஆவது இந்திய புகைப்பட விருதிற்காக விண்ணப்பிக்கும் கடைசிநாள் 2020 ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் “ஆண்டின் தொழில்முறை புகைப்படக்காரர்” மற்றும் “ஆண்டின் தொழில்முறைசாரா புகைப்படக்காரர்” என்னும் இரு பிரிவுகளில் 2020 ஜனவரி 15 மாலை ஆறு மணி வரை விண்ணப்பிக்கலாம்.   தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய நம் நாட்டின் புகழ்பெற்ற தொழில்முறை புகைப்படக்காரருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருதும்” வழங்கப்பட உள்ளது.  விருதுகளுக்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பப்படிவத்தை photodivision.gov.in என்னும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

     “வாழ்க்கை மற்றும் நீர்” என்பது  தொழில்முறை புகைப்படக்காரர்களுக்கான தலைப்பு. “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்” என்பது தொழில்முறைசாரா புகைப்படக்காரர்களுக்கான தலைப்பு. “இயக்குனர், புகைப்படப்பிரிவு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அறை எண் 17, சூச்னாபவன், சிஜிஓ காம்ப்ளக்ஸ், லோதி சாலை, புதுதில்லி-110003” என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக தங்களது புகைப்படத்தை சொந்த மின்னஞ்சல் முகவரி மூலம் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

     ஆண்டின் தொழில்முறை புகைப்படக்காரர் விருது வெல்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 50,000 சிறப்புப் பரிசும் வழங்கப்படும். அதுபோல் ஆண்டின் தொழில்முறைசாரா புகைப்படக்காரர் விருது வெல்வோருக்கு ரூ-75,000, அடுத்த 5 பேருக்கு தலா ரூ.30,000-ம் வழங்கப்படும். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பிப்ரவரி 2-ம் வாரம் விருதுகள் அறிவிக்கப்பட்டு, இறுதிவாரத்தில் விருதளிக்கும் விழா நடைபெறும்.

     புகைப்படம் மூலமாக நாட்டின் கலை, கலாச்சாரம், வளர்ச்சி, பாரம்பரியம், வரலாறு, மக்களின் வாழ்க்கை முறை, சமூகம் மற்றும் மரபு ஆகியவற்றை பிரபலப்படுத்துவதும், வெளிப்படுத்துவதுமே இந்த விருதுகளின் நோக்கம். மேலும் நாட்டிலுள்ள தொழில்முறை மற்றும் தொழில்முறைசாரா புகைப்படக்காரர்களையும் இது ஊக்குவிக்கும்.