62 இடங்களில் அமோக வெற்றி: டெல்லியில் 3–வது முறையாக ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்

0

62 இடங்களில் அமோக வெற்றி: டெல்லியில் 3–வது முறையாக ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்

புதுடெல்லி,பிப்.11–

டெல்லியில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3–வது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். 8 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

டெல்லி மாநிலத்தில் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபைக்கு கடந்த 8–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.

21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 58 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

இந்த தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் அந்த கட்சி, மேஜிக் நம்பரைத் தாண்டி அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

தொண்டர்கள் கொண்டாட்டம்

புதுடெல்லியில் 3–வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. இதனை நிரூபிக்கும் வகையில் அந்த கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றிள்ளது. மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தை பலூன்களாலும், கட்அவுட்டுகளாலும் அலங்கரித்து வைத்திருந்தனர். முன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியதும் கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கெஜ்ரிவால் தடை

தேர்தல் வெற்றியை முன்னிட்டு தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென கெஜ்ரிவால் கேட்டு கொண்டார். டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையை கெஜ்ரிவால் எடுத்து உள்ளார்.

இதனால் அக்கட்சி தொண்டர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர். கெஜ்ரிவாலின் உத்தரவை மீறாமல் கடைப்பிடிப்போம் என அவர்கள் கூறியுள்ளனர். எனினும், இனிப்புகளை வாங்கி அவற்றை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர். டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைப்போம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய ஒன்றாக இடம் பிடித்திருந்தது.

பின்தங்கினார் சிசோடியா

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. அதேசமயம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பத்பர்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்தர் சிங் நெகியைவிட 750 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் (நஜப்கர்), சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (ஷாகூர் பாஸ்டி), தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கோபால் ராய் (பாபர்பூர்), குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் உசைன் (பாலிமாரன்) ஆகியோரும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். 2015–ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் வாழ்த்து

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில், கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர். வளர்ச்சியே செயல்பட்டுள்ளது. சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பல்வேறு தலைவர்களும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.