நிவர் புயல் : ஏழு மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம் – முதல்வர் உத்தரவு

0
7

நிவர் புயல் : ஏழு மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம் – முதல்வர் உத்தரவு

நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, (நவம்பர் 24) மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம். வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 24ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், 25ந்தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது, மிக கனமழையுடன் 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்:-

வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 23.11.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக்கழிவுகளை அகற்றி, தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதற்கு தேவையான அளவுக்கு கிருமி நாசினி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பெரிய ஏரிகளின் நீர் கொள்ளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை இப்பொழுதே தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள் முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலுhரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும், தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.

நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும்.

மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்” என்றுள்ளார்.