500 டாஸ்மாக் கடைகள் மூடல்: ஜெயலலிதாவுக்கு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

0

500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று முதல் மூட உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்குரியது. அதேசமயம் பூரண மதுவிலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது மட்டுமின்றி மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் கோவில்களில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில்களில் உள்ள சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட பழமையான சிலைகளா? அல்லது மாற்று சிலைகளா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கேரள முதல்வராக பினராய் விஜயன் பதவியேற்றதும் முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து கூறிய கருத்துக்கு பாராட்டு தெரிவித்தோம். தற்போது அவர் தனது கருத்தை மாற்றி கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேசி நல்ல தீர்வு காண வேண்டும். அணையை பலப்படுத்தி விட்டு தண்ணீரை முழு கொள்ளளவு ஏற்றினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கேரள முதல்வர் துணை நிற்க வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அரசும், இலங்கை அரசும் மீனவ பிரதிநிதிகளுடன் ஒத்த கருத்துக்களுடன் பேசி தீர்வு காண வேண்டும் என கூறினார்.