50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க ஜெயலலிதா பேரவை உறுதி

0

சென்னை, ஜூலை 1– ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற, செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை அண்ணா தி.மு.க.வில் இணைத்திடவும், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் முழுமையான வெற்றியை பெற்றிடவும், ஜெயலலிதா பேரவை சூளுரைத்தது.
ஜெயலலிதாவின் ஆளுமை திறனைக் கண்டு அணிவகுத்து நிற்கின்ற புதிய இளம் வாக்களர்களை கழகத்தில் இணைத்திட கிராமம், கிராமமாக சென்று புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் மற்றும் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை வீடு வீடாக எடுத்து சென்று வரும் உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீதம் வெற்றியை பெற்றிட, ஜெயலலிதா பேரவையின் சார்பில், செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஜெயலலிதா பேரவை சார்பில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான
ஆர்.பி. உதயகுமார் தலைமையில், தலைமை கழகத்தில் 2 நாட்கள் (நேற்றும், இன்றும்) நடைபெற்றது. இதில் கழக ரீதியாக செயல்பட்டு வரும் 50 மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 2-வது நாள் நிகழ்ச்சியாக, கீழ்க்கண்ட 15 தலைப்புகளான 1) அம்மாவின் தலைமை பண்புகளை போற்றிட, 2) தன்னை அறிதல், 3) எண்ணங்களை மேம்படுத்துதல், 4) உறவுகள் மற்றும் உணர்வுகள் 5) தனி மனித மேம்பாடு 6) அம்மாவின் அற்புதத் திட்டங்களை அகிலம் முழுவதும் எடுத்து சென்றிட 7) பேச்சாற்றலை வளர்த்தல் 8) எழுத்தாற்றலை வளர்த்தல் 9) செயல் திறனை வளர்த்தல் 10) வெற்றிக்கான திறவுகோல் 11) அம்மாவின் ஆளுமைத் திறனை அகிலம் முழுவதும் கொண்டு சென்றிட 12) கழகப் பணிகள் 13) மக்கள் பணிகள் 14) சாதனை விளக்க பிரச்சாரம்
15) மக்கள் தொடர்புக்கான பண்புகளை வளர்த்தல் ஆகிய தலைப்புகளில்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன்உசேன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் என். தளவாய்சுந்தரம், கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் சுதா
கே. பரமசிவம், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதாபேரவைச் செயலாளரும்,
செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், இந்து, சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி
எஸ். ராமச்சந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள், பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி வழங்கினர்.
ஆர்.பி. உதயகுமார்
ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:–
ஜெயலலிதா 2011ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கழகத்திற்கு மாபெரும் இமாலய வெற்றி பெற்றுத் தந்துள்ளார். கழக தொண்டர்களையும், மக்களையும் இருகண்களாக நினைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
எம்.ஜி.ஆர். மறைவின் போது கழக தொண்டர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருந்தது. அதை உயர்த்தி 1ணூ கோடிக்கு மேல், தூய தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக இன்று உருவாக்கி, எவராலும் அசைக்க முடியாத மாபெரும் எக்கு கோட்டையாக கழகத்தை உருவாக்கி உள்ளார்.
தற்போது ஜெயலலிதா நமக்கு ஒரு புனித பணியினை வழங்கி உள்ளார். முதலாவதாக, ஜெயலலிதாவின் மீது பற்றுக்கொண்ட இளைய வாக்காளர்களை கிராமம், கிராமமாக சென்று கண்டறிந்து, அவர்களை நாம் கழகத்தில் இணைத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் 50 லட்சம் புதிய இளம் வாக்காளர்களை கழகத்தில் இணைத்திட வேண்டுமென்ற, லட்சியத்தில் நாம் செயல்படுவதோடு, இந்திய திருநாட்டில் இதுவரை இந்த வையகத்தில், செய்திடாத திட்டங்களை எல்லாம், தமிழக மக்களுக்கு வழங்கிய ஒரே தலைவி என்றால், நம் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே, நடைபெற்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றிப் பெற்று, கழகம் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுத் தந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, மாபெரும் வரலாற்று புகழை பெற்றுத் தந்த ஜெயலலிதா, வாக்களித்த மக்களின் விரல் மை ஈரம் காய்வதற்குள், வாக்குறுதி நிறைவேற்றி தந்தவர் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதாவின் சாதனைகளையெல்லாம், தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்று சொல்ல வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை, பெற்றே தீரவேண்டும் என்று சபதம் ஏற்று, அந்த வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கும் வரை, அயராது பாடுபடுவோம் என்று பேசினார்.
தம்பித்துரை
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் மு. தம்பித்துரை, எம்.பி., பேசியதாவது:–
முதல்வர் ஜெயலலிதா நமக்கு கட்டளையிட்டுள்ள முக்கிய பணி வரும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை கழகத்திற்கு பெற்றிட வேண்டும் என்பதாகும். இந்த வெற்றிக்கு பல்வேறு செயல்திறன்கள் உள்ளது. அதில் முக்கியமானது, கடந்த 2009, 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு பூத் வாரியாக, ஓட்டு வங்கிகளை நாம் சரிபார்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பூத் வாரியாக கழக தொண்டர்கள் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும். கருணாநிதி செய்யும் தில்லுமுல்லுகளை மக்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். மேலும், மேற்கண்ட அனைத்து தேர்தல்களிலும், ஜெயலலிதாவின் வாக்கு வங்கி ஒருபோது குறையவில்லை என்பதை குறிப்பிடத்தக்காகும். ஆகவே, உள்ளாட்சித் தேர்தலில், நாம் கடுமையாக களப்பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றியினை பெற வேண்டும் என்று, பேசினார்.
பா.வளர்மதி
கழக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி பேசியதாவது:–
முதல்வர் ஜெயலலிதா நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், எதிரி கட்சிகளுக்கு சவால் விட்டு பேசினார். ஆனால், அவர்களால் சரியான பதிலைக்கூட கூற முடியவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதி செய்த துரோகங்களை முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு கூறியபோது, எதிரி கட்சியினர் பதில் கூற முடியாமல், திணறினர். இதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா அனைத்து துறைகளிலும், செய்த சாதனைகளை பட்டியலிட்டு புள்ளி விவரத்துடன் கூறினார். இதுபோன்ற சட்டமன்ற கூட்டங்களிலும், தினந்தோறும் ஜெயலலிதா வெளியிட்டு வரும் அறிக்கைகளை, நிர்வாகிகள் நன்கு படித்து, அதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். ஜெயலலிதா கூறி வருவதை, மக்களிடத்தில் எடுத்து சொன்னால் போதும், வெற்றி என்பது நமக்கு 100 சதவீதம் கிடைத்துவிடும் என்று, பேசினார்.
பண்ருட்டி
கழக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் பேசியதாவது:–
முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகள், இந்தியாவின் எந்த மாநிலமும் செய்தது கிடையாது. அதேபோல், கருணாநிதியை எடுத்துக் கொண்டால், அவர் மக்களுக்கு செய்த துரோகங்களை பட்டியலிட முடியாது. தன் குடும்ப நலன் ஒன்றையே பெரியதாக கருதி, தமிழகத்தின் ஜீவாதார உரிமையை தாரவார்த்து கொடுத்தவர் கருணாநிதி. இதுபோன்ற கருணாநிதி செய்யும் தில்லு-முல்லுகள், துரோகங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் பட்டியலிட்டு, எடுத்துக் கூறி வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியினை பெற்றுத் தரவேண்டும் என்று அவர் பேசினார்.
இரவு 8 மணி வரை
நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய பேரவை பயிற்சி முகாம் இரவு 7–45 மணி வரை நடந்தது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் நேற்று நிதி அமைச்சரும் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சேவூர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோ.சமரசம், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., நிர்மலா பெரியசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன், மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி மற்றும் பலர் பேசினார்கள்.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொரு பேரவை மாவட்ட செயலாளருக்கும் அடையாள அட்டை, உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயிரம் படிவம் (ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம்), சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த பதில் முழுவதும் புத்தகமாக அச்சிட்டு வழங்கப்பட்டது. மற்றும் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் டயரியும் வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தனித்து களத்தில் நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பதவி ஏற்ற உடனேயே தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, 500 மதுக்கடைகள் மூடல், தாலிக்கு 8 கிராம் தங்கம், 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.