2-வது முறையாக ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரித்தார் கவர்னர்: உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

0

சென்னை, அக். 23–சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கவர்னர் கூறியுள்ளார்.
முதலமைச்சருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கு கவர்னர் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22–ந்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
முதலமைச்சரின் உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் காணப்பட்டது. சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1–ந்தேதி அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
2–வது தடவை
இன்று காலை இரண்டாவது தடவையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இது குறித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக கவர்னர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று காலை 11–30 மணியளவில் சென்று பார்த்தார்.
தொடர் சிகிச்சை
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, கவர்னருக்கு விரிவாக எடுத்துரைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மூத்த மருத்துவர்கள், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச சிகிச்சை மருத்துவர், தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு சிகிச்சை நிபுணர்கள், உணவியல் நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சுவாசம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கவர்னரிடம் விவரித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கவர்னரிடம் விவரித்தார்.
நல்ல முன்னேற்றம்
கவர்னர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரடியாக சென்று பார்த்தார். முதலமைச்சர் நல்ல குணமடைந்து வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
முதலமைச்சருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழுவுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த கவர்னரை, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் எம்.தம்பிதுரை, நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் டாக்டர் பி.ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றார்கள்.
இவ்வாறு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று இரவு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.சத்தியபாமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–
முதலமைச்சர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள், சுவாச உதவி, பிசியோதெரபி ஆகியவை டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறது.
அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர்கள், இருதயநோய் சிகிச்சை மூத்த நிபுணர்கள், சுவாச சிகிச்சை மூத்த மருத்துவர்கள், தொற்றுநோய் சிகிச்சை துறை மூத்த மருத்துவ ஆலோசகர்கள், நாளமில்லா சுரப்பி சிகிச்சை மூத்த நிபுணர்கள், நீரழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு முதலமைச்சருக்கு சிகிச்சையும், மருத்துவ உதவியும் அளித்து வருகிறது.
ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவு வழங்கப்படுவதை உணவியல் நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் கவனித்து வருகிறார்கள். முதலமைச்சர் நன்றாக பேசுகிறார். அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லண்டன் டாக்டர்
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த மாதம் 30-ந் தேதி பிரபல லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்தார். தொடர்ந்து, இம்மாதம் 5ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் சென்னை வந்தனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே நாடு திரும்பினார். இடையில் மீண்டும் ஒரு முறை அவர் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்தார்.
அதேபோல், எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். தற்போது, தொலைபேசி, இ-மெயில் மூலமாக அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தொடர் சிகிச்சைக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 5 நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் சென்னை வந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சை அவருக்கு நல்ல முறையில் கைகொடுத்ததால், உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஓரிரு நாட்களில் மீண்டும் சென்னை வர இருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தொடர்ந்து பிரார்த்தனைகள், கோவில்களில் பாலாபிஷேகம், விசேஷ அர்ச்சனை, ஹோமம், அகல்விளக்கு ஏற்றி வழிபடுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.