2-ம் உலகப்போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா: மாஸ்கோவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள்

0

2-ம் உலகப்போரின் 75-ம் ஆண்டு வெற்றி விழா: மாஸ்கோவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள்

மாஸ்கோ, 2-ம் உலக போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.

இரண்டாவது உலகப் போரின் போது அச்சு நாடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் போர், மேற்கு பாலைவனப் போர் மற்றும் ஐரோப்பிய அரங்குப் போர் ஆகியவற்றில் நேச நாடுகளின் பெரும்படைகள் போரிட்டன. அத்தகைய நேசநாடுகளின் பெரும்படைகளில் ஒன்றாக பிரிட்டிஷ் இந்திய.

ராணுவப் படையும் பங்கேற்று இருந்தது. இந்தப் போர்களில் பங்கேற்ற இந்திய ராணுவத்தினரில் 87,000 வீரர்கள் இறந்தனர் மற்றும் 34,354 வீரர்கள் காயம் அடைந்தனர்.

அனைத்துப் போர்முனைகளிலும் இந்திய ராணுவத்தினர் போரிட்டதோடு தெற்குப்பகுதி, ட்ரான்ஸ்-ஈரானியன். லென்ட்-லீஸ் பாதை ஆகிய நெடுவழிகளில் சரக்குப் போக்குவரத்துக்கும் உதவி புரிந்தனர்.

இந்தப் பெருவழிகளின் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், உபகரண உதவிப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சோவியத் ஒன்றியம், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவினர். இந்தியப் போர்வீரர்களின் வீரத்தை பாராட்டி 4,000க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 18 விக்டோரியா மற்றும் ஜார்ஜ் கிராஸ் விருதுகளும் உள்ளடங்கும். இதனோடு சோவியத் ஒன்றியமும் இந்திய ராணுவப் படையினரின் வீரதீரச் செயல்களைப் பாராட்டி 23 மே 1944 அன்று மிக்கைல் காலினின் மற்றும் அலெக்சாண்டர் கோர்கின் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி யூஎஸ்எஸ்ஆர்-இன் சுப்ரீம் சோவியத் ஆட்சிக்குழு ராயல் இந்தியன் ஆர்மி சர்வீஸ் வீரர்களான சுபேதார் நாராயண் ராவ் நிக்காம் மற்றும் ஹவில்தார் கஜேந்திர சிங் சந்த் இருவருக்கும் மதிப்புமிகுந்த ஆர்டர் ஆஃப் ரெட் ஸ்டார் விருதுகளை வழங்கியது.

2-ம் உலகப்போரில் சோவியத் மக்கள் பெற்ற வெற்றியின் 75வது ஆண்டு நினைவு நாளையொட்டி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் 24-06-2020 அன்று நேசப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

ரஷிய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த பேரணியில் டாங்கிகள் அணிவகுத்து சென்றன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விண்ணில் பறந்து சாகசம் நிகழ்த்தின.
இந்தியாவின் சார்பில் முப்படைகளைச் சேர்ந்த 75 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் சமூக இடைவெளியுடன் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.
ராணுவ அணிவகுப்பை ரஷிய அதிபர் புதின், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.