15% சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நாசர்: ‘கபடதாரி’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி

0

15% சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நாசர்: ‘கபடதாரி’ தயாரிப்பாளர் மகிழ்ச்சி

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கபடதாரி’. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.

கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது.

இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது.

படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார்.

அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவியுள்ளார்.

தொகையை குறைத்து கொண்டது மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும், மற்ற தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“நாசர் மற்றும் கமீலா நாசர் ஆகியோருக்கு நன்றி. ‘கபடதாரி’ படத்துக்கு உங்களுக்கு வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே தந்தோம், இருந்தாலும் அதிலிருந்து 15 சதவீத சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு டப்பிங்கை முடித்துவிட்டீர்கள். படத்துக்கு நீங்கள் தந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். உங்களைப் போலவே இன்னும் பலர் வளரட்டும்.

பல தயாரிப்பாளர்கள் பெரிய நஷ்டத்தில் இருக்கும்போது, எப்படி தங்கள் கடனை அடைப்பது, முதலீட்டை திரும்பப் பெறுவது, எப்போது பெறுவது என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, இப்படி நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து தயாரிப்பாளரை ஆதரிக்கும்போது அது பண ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் உதவிகரமாக உள்ளது”.

இவ்வாறு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.