117-வது பிறந்தநாள் விழா: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

0

117-வது பிறந்தநாள் விழா: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் ஜெயக்குமார், பென்ஜமின், கே.பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூரிலுள்ள காமராஜர் சிலைக்கு, காமராஜர் மக்கள் நலப் பேரவை சார்பில் நகரத் தலைவர் ராஜா தலைமையில், கெளரவத் தலைவர் இராம.முத்துக்குமரனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செம்மண்டலத்தில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. மாநில சட்ட ஆலோசகர் காமராஜர், மாவட்டப் பொதுச் செயலர் ஆனந்த், பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் வண்டிப்பாளையம் துர்கா நர்சரி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மன்றத் தலைவர் கடல்.நாகராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் செந்தில்முருகன், காமராஜர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தார். அஞ்சலக கண்காணிப்பு அலுவலர் சத்தியமூர்த்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா சார்பில் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் நிறுவனர் தலைவர் எ.நீலலோகிததாசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பி.முஹமதுஇஸ்மாயில், அறக்கட்டளையின் தேசிய பொதுச் செயலர் க.ஜான்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு பங்கேற்று காமராஜர் பிறந்த தின பேருரையாற்றினார்.
முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், அனைத்து குடியிருப்போர் நலச்சங்க பொதுச் செயலர் மு.மருதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிதம்பரம்: சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவுக்கு, நகரத் தலைவர் என்.பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணைத் தலைவர் ஜி.கே.குமார், மாவட்ட பொதுச் செயலர் செய்யது மிஸ்கின், வல்லம்படுகை கணேசன், முருகேசன், சி.பி.ரத்தினம், கட்டாரி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.
காமராஜர் பேரவை சார்பில் சிதம்பரம் கீழவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு பேரவைத் தலைவர் அ.லக்குமணன், செயலர் ஆர்.ஜீவா விஸ்வநாதன், பேராசிரியர் டி.ராஜ்பிரவீன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.ரஜினிகாந்த், நகர பொருளாளர் சம்பந்தம், எஸ்.எஸ்.நடராஜன், நகர துணைத் தலைவர் ஜி.ஆறுமுகம், மாவட்ட மகளிரணி தலைவர் கே.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் கே.நாகராஜன் வரவேற்றார்.

கீழவீதியில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு கடலூர் மத்திய மாவட்ட தலைவர் எ.புரட்சிமணி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். பின்னர் மாலைக்கட்டித் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
பள்ளிகளில்: சிதம்பரம் வீனஸ் கல்விக் குழுமம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை முதல்வர் சார்லஸ் கஸ்பார்ராஜ், தலைமை ஆசிரியர் என்.சுந்தரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையினர் இணைந்து கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடினர். விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா தலைமை வகித்தார். ஆசிரியர் ஜே.சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பி.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எம்.கமல்கிஷோர், எம்.தீபக்குமார் ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர். ஏற்பாடுகளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் வை.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ரியாஸ்அகமது தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சி.உமாராணி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் எஸ்.விநாயகம் பங்கேற்று காமராஜரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். தமிழாசிரியர் ஜெ.பரமசிவம் நன்றி கூறினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 117 – வது பிறந்த நாளையொட்டி, சென்னை – வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள், மாவிளக்கு மற்றும் பால் குடத்தை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்தனர். முடிவில், காமராஜர் சிலைக்கு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் , பாலாபிஷேகம் செய்ய, கூடியிருந்த மக்கள், காமராஜர் புகழ் ஓங்குக என முழக்கம் எழுப்பினர்.