“யார் என்னை வாழ்த்தினாலும், அது உங்கள் வாழ்த்துக்கு நிச்சயம் ஈடாகாது” : நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
95

“யார் என்னை வாழ்த்தினாலும், அது உங்கள் வாழ்த்துக்கு நிச்சயம் ஈடாகாது” : நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், “என்னுடைய பிறந்த நாள் வருகிறபோது, ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் நீங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு வருகை தந்து, கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நானும் தவறாமல் வருகை தந்து, உங்களுடைய வாழ்த்துகளை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். யார் என்னை வாழ்த்தினாலும், உங்களுடைய வாழ்த்துக்கு நிச்சயம் அது ஈடாகாது. அதனால் தான், நானும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் உங்களைத் தேடி, நாடி வந்துவிடுகிறேன்.

நான் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறபோது, இதே மாதிரி ஏற்புரை ஆற்றுகிறபோது, ஒன்றை மறக்காமல் நான் சொல்வது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறபோது, அது எந்த ஆண்டு, என்ன வயது என்று நான் சொல்லி, இந்த ஆண்டு 69, இதைச் சொன்னால் சிலர் நம்ப மாட்டார்கள். இவ்வளவு இளமையாக இருக்கிறானே, 69 எல்லாம் இருக்காது, 39 தான் இருக்கும். அதற்குக் காரணம், நான் உடல் நலத்தை, உணவுப் பழக்கத்தை, உடற்பயிற்சியை எல்லாம் முறையாக செய்து கொண்டு இருக்கக்கூடியவன். என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும், உங்களைச் சந்திக்கின்றபோது 5 வயது குறைந்து விடுகிறது, அதுதான் நான் நினைத்துக் கொண்டிருப்பது. அதேபோல் தான், இன்றைக்கும் உங்களை எல்லாம் சந்தித்து, அதிலும் குறிப்பாக முதலமைச்சராக உங்களுடைய அன்போடு, ஆதரவோடு அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு சந்திக்கிற நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.

இந்தப் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்த நாளையொட்டி வருகிறபோது, ஒவ்வொரு பொறுப்பிலிருந்தும் படிப்படியாக நான் வந்திருக்கிறேன். முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வந்தேன். அடுத்து, சென்னை மாநகரத்தின் மேயராக பொறுப்பேற்று வந்தேன். அதற்குப் பின்னால், உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்று வந்தேன். துணை முதலமைச்சராக பொறுப்பை ஏற்று, இந்தப் பள்ளிக்கு நான் வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராக, உங்களுடைய முதலமைச்சராக நான் வந்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் நான் வருகிற போது, ஒவ்வொரு பதவியை அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில், பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் வந்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கின்றேன். ஆனால் எப்போதும் இந்தப் பொறுப்புக்களைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது, பதவிகளைப் பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. உங்களில் ஒருவனாக நான் என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது. பதவி என்பது இன்றைக்கு வரும், போகும், அது வேறு. ஆனால், அந்தப் பதவியைப் பயன்படுத்தி இங்கே வரவேற்புரை ஆற்றிய, என்னை வாழ்த்திப் பேசிய சகோதரிகள், தாய்மார்கள் எல்லாம், ஏன் பிள்ளைகள் பாடுகிறபோது அந்தப் பாட்டிலே இருக்கக்கூடிய கருத்துக்கள் எல்லாம், இந்த 9 மாத காலத்தில் என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறோம், என்னென்ன பணிகளை மக்களுக்கு ஆற்றியிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக பாடல்கள் மூலமாக, தங்களுடைய பேச்சுக்கள் மூலமாக இங்கே எடுத்துச் சொன்னார்கள், அதுதான் முக்கியம்.

இந்தப் பதவியை நான் என்றைக்கும் பெரும் பதவியாக நினைத்ததில்லை, அதைப் பொறுப்பு என்று நான் நினைத்து, அந்தப் பொறுப்பினை உணர்ந்து என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, இன்றைக்கு உங்களை எல்லாம் சந்திக்கிற, எப்போதும் பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதி வருவது உண்டு. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா வந்த காரணத்தால், உங்களைச் சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது உங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு வந்து சந்தித்துவிட்டுச் சென்றேன்.

இப்போது கூட, அதனால தான் முன்கூட்டியே உங்களை வந்து சந்தித்து விடுவோம் என்று முடிவு செய்து, நம்முடைய தோழர்களிடத்தில் சொல்லி, உங்களுடைய ஒப்புதலைப் பெற்று, எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு முன்னால், முன்கூட்டியே நீங்கள் தான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறீர்கள். நீங்கள் சொன்னதற்குப் பிறகுதான், எங்களுடைய கட்சிக்காரர்கள் சொல்லப் போகிறார்கள், அதிகாரிகள் சொல்லப் போகிறார்கள், மக்கள் சொல்லப் போகிறார்கள். நீங்கள்தான் முதலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறீர்கள், அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

முதலமைச்சராக இருந்து இந்த விழா நடத்துவதன் காரணத்தால் நான் சொல்லவில்லை, இன்றைக்கு முதல் நிகழ்ச்சியாக, முதலில் வாழ்த்தக்கூடிய நிகழ்ச்சியாக இது அமைந்திருப்பதன் காரணத்தால் இந்தப் பிறந்த நாளை என்றைக்கும் நான் மறக்கவே முடியாது. அதனால், உங்கள் வாழ்த்துகளோடு என்னுடைய பயணம் தொடரும், என்னுடைய பணி நிறைவேறும் என்று உங்கள் மூலமாக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எடுத்துச் சொல்லி, நீங்கள் தந்த இந்தச் சிறப்பான வாழ்த்துக்கும், வரவேற்புக்கும் மீண்டும் ஒருமுறை உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லி, என்றைக்கும் உங்களில் ஒருவனாக நான் இருந்து என் கடமையை ஆற்ற உங்கள் வாழ்த்து தொடர வேண்டும், தொடர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.” என உரையாற்றினார்.