தி.மு.க. ஆaட்சி என்பது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
120

தி.மு.க. ஆட்சி என்பது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் ஆட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.08.2022) கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இந்த 15 மாத காலத்தில், இந்த கோவை மாவட்டத்திற்கு இதுவரை, எல்லோரும் குறிப்பிட்டதைப் போல ஐந்தாவது முறை நான் வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தின் மீதும், இந்த மாவட்ட மக்கள் மீதும் நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் இது!

இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதைவிட, கோவை மாநாடு என்று சொல்லக்கூடிய வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்மீது இந்த மாவட்டத்து மக்கள் எத்தகைய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு, இந்த ‘கோவை மாநாடே’ சாட்சியாக அமைந்திருக்கிறது. இன்னும் பெருமையாக சொல்லட்டுமா? எதிர்காலத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை, உங்கள் முகங்களில் பார்க்கும் மலர்ச்சியின் மூலமாக – மகிழ்ச்சியின் மூலமாக நான் அறிந்து கொள்கிறேன்.

நம்முடைய செந்தில்பாலாஜி அவர்கள் சொன்னதுபோல, நான் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவில் – புதிய திட்டங்களைத் தொடக்கிவைக்கக்கூடிய விழாவில் நான் கலந்து கொண்டேன். அதற்குள் இரண்டாவது நிகழ்ச்சியை நம்முடைய அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்து விட்டார். அவரைப் பொறுத்தவரைக்கும், தனக்கென ஒரு இலக்கை வைத்து, எப்படியும் வென்று காட்டக்கூடியவராக நம்முடைய செந்தில்பாலாஜி அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவரோடு துணை நின்று திறம்படி செயல்படக்கூடிய நம்முடைய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட இந்த மாவட்டத்தின் அனைத்து அரசு அதிகாரிகளை நான் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் குறிப்பாக இந்தக் கோவை மாவட்ட மக்களின் சார்பில் நன்றி சொல்கிறேன், அவர்களை வாழ்த்துகிறேன், அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோவையில் இத்தகைய பிரமாண்டமான விழா நடப்பது பொருத்தமானதுதான். ஏனென்றால் கோவை என்றாலே பிரமாண்டம்தானே.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் இந்தக் கோவை. பெருந்தொழில்கள் கொண்ட நகரம் மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் ஏராளமாக இருக்கும் நகரம் இந்தக் கோவை! பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டுமல்ல – தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி இறக்குமதிக் குறியீடுகளில் வளமான அளவீடுகளை வழங்கும் மாவட்டமாக இந்தக் கோவை அமைந்துள்ளது.

என்ன தொழில்தான் இல்லை! என்று வியந்து சொல்லத்தக்க வகையில் இந்த மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

நூற்பாலைகள்,

விசைத்தறிகள்,

வார்ப்பாலைகள்,

வெட்கிரைண்டர் தயாரிப்பு,

மோட்டார் பம்புகள் தயாரிப்பு,

உதிரி பாகங்கள் தயாரிப்பு,

நகைத் தயாரிப்பு நிறுவனங்கள்,

தென்னை நார் சார்ந்த தொழில்கள்,

உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் –

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்தளவுக்கு தொழில் வளம் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக இந்தக் கோவை மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது!

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது – முடிவுற்றிருக்கக்கூடிய பணிகளைத் திறந்து வைப்பது – மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது – என்கின்ற மூன்று திட்டமிடுதல்களோடு தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு விழாக்களும் இப்போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது எல்லோருக்கும் தெரியும்.

அந்த வகையில், இந்தக் கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம்

22-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில்,

ரூபாய் 89 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில், 128 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நான் நடத்தி வைத்தேன்.

ரூபாய் 587 கோடி 91 லட்சம் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்தேன்.

ரூபாய் 646 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் 25 ஆயிரத்து 123 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் நான் வழங்கியிருக்கிறேன்.

இன்று, அதைவிடப் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன, இதை முடித்து விட்டு நான் வழங்க இருக்கிறேன்.

இன்றைய நாள், அனைத்துத் துறைகளின் வாயிலாக, ரூபாய் 589 கோடி மதிப்பீட்டில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 410 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் இங்கு வழங்கப்படவிருக்கிறது. எல்லோரும் சொன்னார்களே பெருமையோடு, நானும் சொல்கிறேன், அதைத்தான் வழிமொழிகிறேன். இதுவரை நடந்த அரசு விழாக்களிலேயே அதிகளவு பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுவது இந்தக் கோவை மாவட்டத்தில்தான் என்ற மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

என்ன செய்தோம்? என்ன செய்தோம்? என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கு நான் நெஞ்சுறுத்தி கம்பீரமாக இந்த மேடையில் நின்று சொல்கிறேன், இதுதான் சாதனை.

அனைத்து துறைகளின் சார்பில், ரூபாய் 662 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், 748 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன், சற்றுமுன் உங்களுக்கு முன்னால் அடிக்கல் நாட்டினேன்.

ரூபாய் 272 கோடி மதிப்பீட்டில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை இன்றைக்கு உங்கள் முன்னால் தொடங்கி வைத்திருக்கிறேன்.

கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் இந்தக் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆயிரத்து 234 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 185 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதிலிருந்து இந்த அரசு மக்களுக்காக இருக்கிறது, இந்த அரசு பல காரியங்களைச் செய்து கொண்டு இருக்கிறது, சாதனைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறியலாம்.

ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை – கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பதை நான் கம்பீரமாகச் சொல்வேன்.

மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு, பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கும் இன்றைய நிகழ்ச்சியை மேலும் மும்மடங்கு பிரம்மாண்டமாக்கும் வகையில், மூன்று புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கவுள்ளோம் என்பதையும் மிக மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

161 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

60 கல்லூரிகள் மற்றும் 200 அரசுப் பள்ளிகளுடன், “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் ஆகியோருக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான “சமவாய்ப்பு மையம்” திட்டம் தொடங்கப்படுகிறது.

அதேபோல, கோவை மாவட்டத்து மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் திட்டம்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் இங்கே பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார், பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கம் திட்டம்!

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஆயிரத்து 810 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

உலக அளவிலான தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்காக இதுபோன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

கடந்த ஓராண்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.

புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தில்,

85 பயனாளிகளுக்கு 18 கோடியே 47 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

“முதல்வரின் முகவரி” என்ற திட்டத்தின் மூலம் 679 நபர்களுக்கு

31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 150 பேர் பயனடைந்துள்ளார்கள்.

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ், 19 ஆயிரத்து 590 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில், 5 பவுனுக்கு உட்பட்டிருக்கக்கூடிய நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம், 47 ஆயிரத்து 567 பயனாளிகளுக்கு 199 கோடியே 53 லட்ச ரூபாய் தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

10 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 24 ஆயிரத்து 839 வீட்டு மின் இணைப்புகளும், 13 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்

294 தொழிற்சாலை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 ஆயிரத்து 264 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூபாய் 28 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில், 5 ஆயிரம் 970 விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரப்பட்டுள்ளது.

1,703 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 66 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

13,171 சுய உதவிக் குழுக்களுக்கு 856 கோடியே 54 லட்ச ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 19.5.2022 அன்று கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் தொடர்ந்து நான் இதே கோவையில் 3 மணி நேரம் அவர்களை உட்கார வைத்து கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளையெல்லாம் கேட்டு, படிப்படியாக அந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் இந்த ஓராண்டு காலத்திற்குள் செய்து தரப்பட்டிருக்கக்கூடிய பணிகள்! இதனுடைய தொடச்சியாகத்தான் இந்த மாபெரும் விழா நடந்து கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகள் விரைந்து நடைபெறும்.

மத்திய சிறைச்சாலையை இடம் மாற்றி, அந்த இடத்தில் 200 கோடி ரூபாய் செலவில், செம்மொழிப் பூங்கா விரைவில் அமைக்கப்படவிருக்கிறது.

கோயம்புத்தூர் மக்களின் குடிநீர்த் தேவையினைத் தீர்ப்பதற்காக, சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று மாண்புமிகு கேரள முதலமைச்சரிடம் நான் கடிதம் மூலமாகக் கேட்டுக் கொண்டேன், தொலைபேசியில் வலியுறுத்தினேன். மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய, கேரள அரசால் போதிய தண்ணீர் உடனடியாக திறந்துவிடப்பட்டது.

கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்த விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சென்னையைப் போன்று கோயம்புத்தூரில், வீட்டுமனை மற்றும் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதற்கு, அங்கீகாரம் பெறுவதற்கு, கோயம்புத்தூர் மாநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில், டைம்ஸ் ஆப் இந்தியா என்கிற பிரபலமான ஆங்கிலப் பத்திரிகை, அதில் ஒரு கட்டுரை வந்தது, மிகத் தெளிவாக எழுதியிருந்தார்கள், கோவையில் என்னென்ன பணிகளெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி, ‘கோவை மாபெரும் தொழில் நகரமாகிறது’ என்று பாராட்டி எழுதி இருக்கிறது.

நாட்டிலேயே, அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து, கல்வியாக

இருந்தாலும் – புதிய வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் – பொருளாதார வளர்ச்சியாக இருந்தாலும் – சமூகநலத் திட்டங்களாக இருந்தாலும் – அனைத்திலும் மேல்நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கும் மாநிலமாக கடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடு சென்று கொண்டு இருக்கிறது என்று எழுதியிருக்கிறது.

அண்மையில், நான் டெல்லிக்குச் சென்றிருந்தேன். எதற்கென்றால், இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களையும், குடியரசுத் துணைத் தலைவர் அவர்களையும் சந்திக்கச் சென்றேன். அவர்கள் பதவியேற்ற நேரத்தில் நான் செல்ல முடியாத சூழ்நிலை. கொரோனா என்ற அந்த தொற்று நோயில் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் நான் உடனடியாக வெளியூருக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை. அதனால், சில நாட்களுக்கு முன்பு நான் டெல்லிக்குச் சென்றிருந்தபோது, நான் அவர்களைப் பார்த்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லச் சென்றிருந்தேன்.

அப்போது, நான் சந்தித்தவர்கள் தமிழ்நாட்டைப் பற்றி, அதன் வளர்ச்சியைப் பற்றி பற்றிக் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்வியைப் பார்த்து, ஒரு உயர்ந்த கருத்து பரவலாக இருப்பதை நான் உணர்ந்தேன். ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ பெற்றதல்ல! தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அளித்துச்சென்ற அடித்தளத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், கழக ஆட்சி செல்வதால் பெற்றிருக்கக்கூடிய நற்பெயர்.

கழகம் கடந்து வந்த பாதை கடினமானது. ஆனால் தமிழ் மக்கள் வாழ்வு இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அது தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறருது, அதற்காகத்தான் பாடுபடுகிறது கழகம், இந்த ஆட்சி. இதில் எந்த நாளும் மாறுபாடு என்பதே இருக்காது என்பதை நான் உறுதியோடு தெரிவிக்கிறேன்!

பல்வேறு மாநில அரசுகளும், தமிழ்நாடு அரசின் முற்போக்கு – முன்னேற்றத் திட்டங்களை உன்னிப்பாகக் கவனித்து தங்களுடைய மாநிலத்தில் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால். இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! பொத்தாம்பொதுவாக, எந்த வாக்குறுதியையும் திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்று சிலர் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து நான் கேட்கின்ற கேள்வியெல்லாம், மக்களோடு மக்களாக வந்து – மக்களிடத்தில் வந்து நீங்கள் கேட்க வேண்டும்.

ஏதோ பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து, பேட்டியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று உட்கார்ந்து கொள்பவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாது. தமிழ்நாட்டு மக்கள் அடையும் நன்மைகளைப் பற்றி எதுவும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது! நான் இன்னும் கேட்கிறேன்,

கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய கோடிக்கணக்கான மகளிர்

தங்களது வீட்டுக்கு மருத்துவப் பணியாளர்கள் வந்து அவர்கள் மூலமாக சிகிச்சை பெற்ற பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மக்கள் இருக்கிறார்கள்.

இலவச மின் இணைப்புப் பெற்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்டு இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்கள், உழவர்கள்,

நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டங்களின் மூலமாக வாழ்க்கைக்கு நல்வழியைப் பெற்ற லட்சக்கணக்கான மாணவக் கண்மணிகள்,

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வுகளைப் பெற்ற இங்கே இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் –

என அத்தனை பேரும், நன்றி மறவாத் தன்மையுடன் இந்த ஆட்சியை வாழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள மனமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கும் சிலர் அளித்து வரும் பேட்டிகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் தருவது கிடையாது.

“இனமானம் – தன்மானம் ஆகிய இரண்டையும் பற்றிக் கவலைப்படாதவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று தந்தை பெரியார் சொன்னார். அந்த வகையில், தன்மானம் இல்லாத – இனமானம் என்றால் என்னவென்று தெரியாத கூட்டம்தான், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பார்த்து விமர்சிக்கிறது.

தி.மு.க. ஆட்சி என்பது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் ஆட்சி!

தி.மு.க. ஆட்சி என்பது அடக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களுக்காக நன்மை செய்யக்கூடிய ஆட்சி!

இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக அமைந்திருக்கக்கூடிய அரசு.

சிறுபான்மைச் சமூகத்துக்கும், பெரும்பான்மைச் சமூகத்துக்கும் இடையேயான ஒற்றுமையை எந்தக் காலத்திலும்; எந்தச் சூழ்நிலையிலும், நம் மாநிலத்தில் சிதைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் சகோதரத்துவ அரசு!

எல்லார்க்கும் எல்லாம் என்கிற சமநிலைச் சமதர்ம சமுதாயம் அமைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசு தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு!

ஒரு தாய், தனது எல்லாப் பிள்ளைகளையும், ஒரே தரத்துடன், ஒரே குணத்துடன் வாழ்விப்பதைப் போல அனைவருக்குமான அரசாகச் செயல்பட்டு வரக்கூடிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு!

வாக்களிக்காதோரும் பாராட்டும் வகையில் நாம் அன்றாட செயல் அமைய வேண்டுமென்று நினைக்கிறவன் நான்!

என் நெஞ்சில் இதை வைத்துதான், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில்தான், எனது கொளத்தூர் தொகுதியைப் போல, மற்ற எல்லாத் தொகுதிகளையும் நான் எப்படி கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நேற்றைக்கு நான், கோவைக்குப் புறப்படுவதற்கு முன்பு, அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு கடிதத்தை எழுது அனுப்பிவிட்டு தான் புறப்பட்டேன். நீங்கள் பத்திரிகையில் படித்திருப்பீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை, 234 தொகுதிக்கும் விரிவுபடுத்தி இருக்கிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை நான் தொடங்கினேன். அனைத்துத் தொகுதிகளுக்கும் போனேன். அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றேன். ஆட்சிக்கு வந்ததும், நூறு நாட்களில் கோரிக்கைகளை சரிபார்த்து நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னேன்.

பொறுப்பேற்றதும் தனித் துறையை உருவாக்கி, 100 நாட்களில், பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறேன். அனைத்தையும் என்று சொல்லி யாரையும் நான் ஏமாற்ற விரும்பவில்லை. பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறேன். 100 நாட்களோடு அந்தத் திட்டம் முடியவில்லை. இப்போது, 234 தொகுதிக்கும் விரிவுபடுத்தி இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.நடராசன் பேசுகிறபோது, MLA-க்கு மட்டும் கொடுக்கிறீர்கள், MP-க்கு இல்லையா? என்று கேட்டார்கள். உங்கள் MP தொகுதி அந்த MLA தொகுதியில் தான் அடங்கியிருக்கிறது. அதனால் கவலைப்பட வேண்டாம். எது எப்படியிருந்தாலும், நீங்கள் சொல்லியிருக்கக்கூடிய கோரிக்கைகள் கவனிக்கப்படும், அதை நிறைவேற்றுகிற முயற்சிகளை இந்த அரசு நிச்சயமாக ஈடுபடும். அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஆகவே, அதற்கான கடிதத்தைத்தான் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நான் அனுப்பி வைத்து இருக்கிறேன்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், அவரவர் தொகுதிக்கு வேண்டிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சில தேவைகள், அந்தந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்த இயலாத நிலை இருக்கலாம்.

ஆக, இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியப் பணிகள் குறித்து அந்தத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெற்று, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, அவற்றைப் பரிசீலித்து அதற்கு ஒப்புதல் வழங்க நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், தங்கள் தொகுதியின் முக்கியமான பத்து திட்டங்களின் பட்டியலை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடத்தில் நீங்கள் அளிக்கலாம். பட்டியலில் இருக்கக்கூடிய, மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதி அளித்துள்ளேன். என்ன அந்தத் திட்டம்?

குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்,

வேளாண் உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்,

இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள்,

மருத்துவ வசதிகள்,

பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ போன்ற புதிய நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள்,

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள்,

மின் மயானம்,

நவீன நூலகம்,

நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள்,

புதிய சுற்றுலாத் தலங்கள்,

தற்போதுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்யலாம்.

இந்தப் பட்டியலை, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் பெருமையோடு சொல்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடித் திட்டம் இந்த திட்டம்.

இது திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அது அதிமுகவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பாஜகவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து தான். அந்த தொகுதிகள் பயனைடைய இருக்கின்றன. இதற்காக, அவர்கள் என்னைப் பாராட்டவில்லையென்றாலும், நன்றி சொல்லவில்லையென்றாலும் நான் நிச்சயமாக கவலைப்பட மாட்டேன், பரவாயில்லை! அதையெல்லாம் எதிர்பார்த்து மக்களுக்காக கடமை ஆற்றுகிறவன் ஸ்டாலின், இந்த ஸ்டாலின் அல்ல! இது என்னுடைய பொறுப்பு என, மக்களுக்கு அந்த உணர்வோடு நான் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள். பரவாயில்லை. அவர்களும் பிழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன், அவ்வளவுதான்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்னார்:

போற்றுவார் போற்றட்டும்

புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்

ஏற்றதோர் கருத்தை

எனதுள்ளம் என்றால்

எடுத்துரைப்பேன்

எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்!

– அந்த உணர்வோடு நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இவர்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லை.

நமது அரசின் திட்டங்களால், நாளும் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டு எனக்குப் போதும். உங்களுடைய முகங்களில் பார்க்கும் மகிழ்ச்சிதான் என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

இந்த மூன்று நாள், இன்று, நாளை, நாளை மறுநாள், மூன்று நாள் சுற்றுப்பயணத்திற்காக, நேற்று மாலை சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, கோவை விமான நிலையத்தில் இறங்கி நான் தங்குகிற விடுதிக்கு வந்து சேர்வதற்கு ஏறக்குறை 2 மணி நேரம் ஆனது. அதேபோல இன்று காலை இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு தங்கியிருக்கக்கூடிய இடத்திலிருந்து புறப்பட்டு இந்த இடத்தில் வருவதற்கு ஏறக்குறைய 1½ மணியிலிருந்து 1¾ மணி நேரம் ஆனது. 10 நிமிடத்தில் வந்துவிடலாம். எதற்கு இவ்வளவு காலதாமதம். வருகிற வழியெல்லாம் மக்கள் சாலையின் இரு புறமும் நின்று, ஆண்கள், பெண்கள், தாய்மார்கள், வயது முதியோர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருமருங்கிலும் இருந்து வரவேற்ற அந்தக் காட்சியை பார்த்தேன். ஆக மக்கள் கொடுத்திருக்கக்கூடிய வரவேற்பை பார்க்கிறபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு இணை எதுவும் கிடையாது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா!

ஆக, உங்களின் சிரிப்பினில்தான் நான் இறைவனைக் காண்கிறேன், அண்ணாவை காண்கிறேன், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞரை காண்கிறேன்!

இந்தக் கொள்கைகளும், கோட்பாடுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும் நிறைவேறிவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் மட்டும்தான், திமுக அரசை விமர்சிக்கிறார்கள். என்னை விமர்சிக்கிறார்கள்.

தனிப்பட்ட ஸ்டாலினை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஏனென்றால் நான் விமர்சனத்தில் வளர்ந்தவன்!

இன்னும் சொன்னால், விமர்சனங்களாலேயே வளர்ந்தவன் நான்!

எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன்தான் நான்!

யாராவது எதிர்த்தால்தான் நான் மேலும் மேலும் உற்சாகமாகச் செயல்படுவேன். அதே நேரத்தில், என்னை எதிர்ப்பதன் மூலமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கு, குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

விமர்சனங்களை விரும்புவன்தான் நான். ஆனால் விதண்டாவாதங்களை அல்ல!

வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்பவன்தான் நான். ஆனால் பயனற்ற சொற்களை அல்ல!

சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை இன்றைக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது என்பதை நான் அழுத்தந்திருத்தமாக தெரிவிக்க விரும்புகிறேன்.

காரணம் இந்த ஓராண்டு காலத்தில், ஓராயிரம் திட்டங்கள்! ஓன்றரை வருடம் தான், இன்னும் ஒன்றரை வருடம் ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு திட்டங்கள். நினைத்துப் பாருங்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு என்றால், ஐந்தாண்டு வருடங்களில், அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றித், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, உலகில் அனைத்து வளம் கொண்ட மாநிலமாக ஆக்குவதே எங்களுடைய இலட்சியம்! அதனை அறிவிக்கக்கூடிய மாநாடுதான், இந்த மாநாடு.

இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது,

உங்களுக்கான அரசு இது!

உரிமையுடன் கோரிக்கை வையுங்கள்!

உண்மையுடன் நிறைவேற்றித் தருவோம்!

ஆகவே, இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்க வேண்டும் என்று கேட்டு, உங்கள் அன்புக்கும், உங்களுடைய வாழ்த்துக்கும், என்னுடைய நன்றி, நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.