மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்

0
13

மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்- மு.க.ஸ்டாலின்

சென்னை, தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

இன்று காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் வருமான சோதனை நடந்து வருகிறது. இவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் ஆவார். இவரது இல்லத்தில் தான் ஐபேக்கின் அலுவலகமும் இயங்கி வருகிறது.

சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கும் அதே நேரத்தில் திமுக ஐடி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிதாவது:

நான் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கினேன். அங்கு இருந்து சாலை மார்க்கமாக ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. என் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டுக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்போடு ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அதிமுக அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பது பாஜக அரசு, மோடி அரசு. ஏற்கனவே அதிமுக அரசு மீது முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.

ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கொஞ்சமும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

இன்னும் தேர்தலுக்கு 3 நாட்கள் உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள் தான் மாநில உரிமைகளை எல்லாம் விட்டு காலில் விழுந்து கிடக்கலாம். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.