மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 முகக்கவசம் அணியுங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

0
8

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 முகக்கவசம் அணியுங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் இருங்கள். முடிந்த அளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள்.

* தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள்.

* முகக்கவசம் அணியுங்கள்; முகக்கவசத்தை மூக்கு, வாய் மூடி உள்ளபடி முழுமையாக பயன்படுத்துங்கள்.

* மருத்துவமனை, பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும்போது, தொழிற்சாலை மற்றும் அலுவலங்களில் பணிபுரியும்போது இரண்டு முகக்கவசம் பயன்படுத்துங்கள்.

* கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

* இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான்.

* சிலருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் காய்ச்சல், உடல் வலி வரலாம். அதுவும் ஒரே நாளில் சரியாகி விடும்.

* தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக தமிழக அரசு நடத்தி வருகிறது.

* முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். வரும்முன் காப்போம், கொரோனா இல்லா தமிழகம் அமைப்போம்”.

இவ்வாறு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முகக்கவசம் அணியுங்கள்! கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்! தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!