மக்கள்தான் எஜமானர்கள்: 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0
86

மக்கள்தான் எஜமானர்கள்: 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும் மாநாடு நேற்று தொடங்கியது.

மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இன்று 2-வது நாளாக கலெக்டர்கள் மாநாடு தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற கலெக்டர்களை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்ட கலெக்டர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்த அரசினுடைய திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும்.

எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டாக அமைய முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்களாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அரசுக்கு வருமானம் பெறுவது, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து நீங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து நீங்கள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். அந்த வகையில் மாவட்ட கலெக்டர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இன்று மாலையிலும் கலெக்டர்களின் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) கலெக்டர்கள், வன அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்திலும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார். மாவட்டங்களில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளார்.