பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக வரவேற்பு

0
267

பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. பயணித்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன: உற்சாக வரவேற்பு

அம்பாலா, ஜூலை.30-

பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணித்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானா அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று கம்பீரமாக தரையிறங்கின. அவற்றுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதில் முதல்கட்டமாக 10 போர் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்து உள்ளது.

இந்திய விமானப்படையை சேர்ந்த 12 விமானிகள், ரபேல் போர் விமானத்தை இயக்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் பல இந்திய விமானிகளுக்கு அடுத்த 9 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 5 ரபேல் போர் விமானங்கள் பிரான்ஸிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள 5 ரபேல் விமானங்கள் பிரான்ஸின் மேரிங்நாக் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி இந்தியாவுக்கு புறப்பட்டன. இந்திய விமானப் படையை சேர்ந்த ஹர்கிரத் சிங், காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதார், ரோகித் கட்டாரியா உள்ளிட்ட விமானிகள் 5 போர் விமானங்களையும் இயக்கினர்.

பிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொலைவு 7 ஆயிரம் கி.மீ. ஆகும். வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப்படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று முன்தினம் தரையிறங்கின. நடுவானில் பிரான்ஸின் ஏர் பஸ் 330 விமானம், போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியது. சுமார் 7 மணி நேர பயணத்துக்கு பிறகு அல் தாப்ராவில் தரையிறங்கிய இந்திய விமானிகள் சிறிது ஓய்வெடுத்தனர். அங்கேயே ரபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

அல் தாப்ராவில் இருந்து நேற்று காலை 5 ரபேல் போர் விமானங்களும் சீறிப் பாய்ந்து புறப்பட்டன. இந்திய வான் எல்லைக்குள் ரபேல் போர் விமானங்கள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நுழைந்தன.

இந்திய விமானப்படையின் சுகோய் 30 எம்கேஐ ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்கள், ரபேல் விமானங்களுக்கு இருபுறமும் பாதுகாப்பு அரண் அமைத்தன. வெண்மேகம் சூழ்ந்த வான்பரப்பில் 7 விமானங்களும் வானில் கம்பீரமாக அணிவகுத்தன. அந்த வீடியோவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் 5 ரபேல் போர் விமானங்களும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கம்பீரமாக தரையிறங்கின. அந்த போர் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய விமானப்படை சரித்திரத்தில் நேற்றைய நாள் ஒரு மகத்தான நாளாக பதிவானது.

விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, ரபேல் போர் விமானங்களை நேரில் வரவேற்றார். விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அம்பாலா விமானப்படை தளத்தின் ‘கோல்டன் அரோஸ்’ படைப் பிரிவில் ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் சம்ஸ்கிருதத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய ரபேல் போர் விமானங்களை வரவேற்கிறேன். நாட்டை காப்பதை விட வேறு எந்த தர்மமும் உயர்ந் தது கிடையாது. நாட்டின் பாதுகாப்பே நமது தலையாய கடமை’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி

ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்ததற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “இந்தியாவில் ரபேல் போர் விமானங்கள் வந்திறங்கி இருப்பது ராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும்” எனவும் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மத்தியில் ரபேல் போர் விமானங்கள் அதிகாரபூர்வமாக விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன. மீதமுள்ள போர் விமானங்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் பிரான்ஸ் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன விமானப் படையின் அதிநவீன விமானம் ஜே–20 ஆகும். அந்த விமானத்தைவிட, ரபேல் போர் விமானங்கள் பல மடங்கு சக்தி வாய்ந்தவை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.